கூடங்குளம் முதல் அணு உலையில் 3 மாதங்களுக்குப் பின் மின் உற்பத்தி: மத்திய மின் தொகுப்பில் 300 மெகாவாட் இணைப்பு

கூடங்குளம் முதல் அணு உலையில் 3 மாதங்களுக்குப் பின் மின் உற்பத்தி: மத்திய மின் தொகுப்பில் 300 மெகாவாட் இணைப்பு

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைந்துள்ள முதலாவது அணு உலையில், மூன்று மாதங்களுக்குப் பின்னர் வியாழக்கிழமை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைந்துள்ள முதலாவது அணு உலையில், மூன்று மாதங்களுக்குப் பின்னர் வியாழக்கிழமை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன்மிக்க இரு அணு உலைகள் இயங்கி வருகின்றன. முதலாவது அணு உலையில் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது. பின்னர், அவ்வப்போது பரிசோதனைகள் நடைபெறுவதும், மின் உற்பத்தியை தாற்காலிகமாக நிறுத்துவதுமாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நவம்பர் மாதம் 26ஆம் தேதி வரையில் தொடர்ச்சியாக உலை இயக்கப்பட்டு, கூடங்குளம் முதலாவது அணு உலையில் 6244.24 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில், பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த நவம்பர் 26ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இப்போது, பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதால், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் ஹெச்.என். சாஹு கூறியது:
கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள முதலாவது அணு உலையில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இறுதியாக முதல் உலையில் 815 மெகாவாட் வரை உற்பத்தி இருந்தது. பின்னர், பராமரிப்புப் பணிகளுக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டது. 83 நாள்களுக்கு பிறகு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. வியாழக்கிழமை முதல் உலையில் உற்பத்தி தொடங்கி சரியாக 7.41 மணிக்கு மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இணைத்தோம். முதலில் 250 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. வியாழக்கிழமை மாலை 260 மெகாவாட் ஆக உயர்ந்தது. இரவில் 300 மெகாவாட்டை எட்டியது. தொடர்ந்து படிப்படியாக மின் உற்பத்தியை அதிகரித்து இரண்டு நாளில் முழு கொள்ளளவு எட்டப்படும். இதேபோல, இரண்டாவது அணு உலையில் அதன் முழு கொள்ளளவு எட்டப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதலைப் பெற்று, 2 மாதங்களுக்குள் வர்த்தகரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்படும் என்றார் அவர்.
தமிழகத்துக்கு மீண்டும் மின்சாரம்: கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தியாகும் மின்சாரம், திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்படும். பின்னர், அங்கிருந்து மின்பிரிப்பகத்தின் மூலமாக ஒப்பந்தப்படி 5 மாநிலங்களுக்கு மின்சாரம் பிரித்து வழங்கப்படும். முதல் உலை மூலம் தமிழகத்துக்கு 563 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
ஆந்திரத்துக்கு 50 மெகாவாட், கேரளத்துக்கு 133, புதுவைக்கு 33.50, கர்நாடகத்துக்கு 221 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும். முதல் உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்ததால், தமிழகத்துக்கு கிடைத்து வந்த மின்சாரம் தடைபட்டிருந்தது. இப்போது, உற்பத்தி மீண்டும் தொடங்கியிருப்பதால் கூடுதல் மின்சாரம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. 2 நாள்களுக்கு பிறகு வழக்கம்போல கூடங்குளத்தில் இருந்து 563 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கும் சூழல் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com