சமாதி அரசியல்!

தமிழகத்தில் முதல்வராக இருந்த அண்ணாதுரை 1969-இல் மறைந்தது முதல் தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் சமாதிக்குப் போவது என்கிற வழக்கம் ஆரம்பித்தது. பெரியார் மறைவுக்குப் பிறகு பிறந்தநாள்,
சமாதி அரசியல்!

தமிழகத்தில் முதல்வராக இருந்த அண்ணாதுரை 1969-இல் மறைந்தது முதல் தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் சமாதிக்குப் போவது என்கிற வழக்கம் ஆரம்பித்தது. பெரியார் மறைவுக்குப் பிறகு பிறந்தநாள், நினைவுநாள் என்று மட்டுமல்லாமல் பதவியேற்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அண்ணா, பெரியார் சமாதிகளுக்குப் போய் ஆசி பெறும் பகுத்தறிவு பிரகாசிக்கத் தொடங்கியது.
ஜெயலலிதா மறைந்த டிசம்பர் 5-ம் தேதிக்குப் பின் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உள்ள அவரது சமாதி முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அது முதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியைச் சுற்றியே தமிழக அரசியல் களம் இன்றுவரை சுழன்று வருகிறது.
நல்லாட்சியைத் தருவோம் என ஒரு தரப்பு சபதம் எடுத்தால், ஆட்சியை வீழ்த்திக் காட்டுவோம் என்று எதிர்தரப்பு சபதம் எடுக்கும் இடமாக ஜெயலலிதா சமாதி மாறியுள்ளது.
இந்த வழக்கத்தை பிப்ரவரி 7-ஆம் தேதி முதன்முதலாகத் தொடங்கி வைத்தது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான்! ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 40 நிமிஷங்கள் கண்களை மூடி அமர்ந்திருந்த அவர், கட்டாயப்படுத்தியதால்தான் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தேன். மக்கள் விரும்பினால் ராஜிநாமாவைத் திரும்பப் பெறுவேன் என்று பேட்டி அளித்தார். அதைத் தொடர்ந்து தமிழக அரசியலின் குறுக்குவெட்டு தோற்றமே மாறிப் போய்விட்டது. அதிமுகவினர் இரண்டு தரப்பாகப் பிரிந்தனர். பன்னீர்செல்வத்தை 10 எம்.எல்.ஏ.க்கள், 12.எம்.பி.க்கள் ஆதரித்தனர்.
ஆனால், ஆட்சி அமைக்கக் கூடிய வகையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு சசிகலாவுக்குத்தான் இருந்தது. பிப்ரவரி 9-ஆம் தேதி ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா வந்தார். ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை நினைவிடத்தில் வைத்து சசிகலா வணங்கினார். ஆளுநர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். ஆனால் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதற்கிடையில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் ஆளுநரைச் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
அதே நாளில் ஆளுநரைச் சந்தித்த பன்னீர்செல்வம் வீட்டுக்குச் செல்லாமல் இரவு 9.15 மணியளவில் நேராக ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்தார். அவர் வந்த சில மணி நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அங்கு வந்தார். நினைவிடத்தில் வணங்கி எழுந்த தீபா, "இன்று முதல் என் அரசியல் பிரசேவம் தொடங்குகிறது. இனி, இரு கரங்களாக இணைந்து செயல்படுவோம்' என்று கூறி, ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு தீபா சென்றார். எனினும், அதற்குப் பிறகான அரசியல் நிகழ்வுகள் எதிலும் பன்னீர்செல்வத்துடன் அவர் இணைந்து செயல்படவில்லை.
அதன் பின், பிப்ரவரி 15-ஆம் தேதி பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்பு ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சசிகலா வந்தார். மலர்தூவி மரியாதை செலுத்தியதற்கு பிறகு, சூழ்ச்சி, துரோகம், இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவேன். திமுக என்றே ஒன்று இருக்கக்கூடாது என்றெல்லாம் சபதம் செய்து விட்டுச் சென்றார்.
பிப்ரவரி 16-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றதை அடுத்து, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். நல்லாட்சி தரப் போவதாக உறுதி எடுத்தார். அவர் சென்ற ஒரு மணி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் சமாதிக்கு வந்தார். மக்கள் விரோத ஆட்சியை அகற்றப் போவதாக சபதம் எடுத்தார்.
இப்படியே போனால் சபதம் எடுக்கும் இடமாக ஜெயலலிதா சமாதி மாறிவிடும். இல்லையெனில் அடுத்த சில ஆண்டுகள் தமிழக அரசியல் நிகழ்வுகளுக்கான களமாக ஜெயலலிதா சமாதி இருக்கும் சூழல் உருவாகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com