தமிழகத்தை ஆளப்போவது யார்? எதிர் அணியின் குற்றச்சாட்டு உண்மையா?

அதிமுக பொதுச் செயலர் சசிகலா, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால், மூத்த தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
தமிழகத்தை ஆளப்போவது யார்? எதிர் அணியின் குற்றச்சாட்டு உண்மையா?


சென்னை: அதிமுக பொதுச் செயலர் சசிகலா, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால், மூத்த தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

30 அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆளுநர் மாளிகையில், தமிழகத்தின் 13வது முதல்வராக பதவியேற்றார்.

இந்த நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள், குடும்ப ஆட்சிக்கு வழி ஏற்படுத்த வேண்டாம் என்றுதான் சசிகலா அணியில் இருந்து பிரிந்து சென்ற பன்னீர்செல்வம் அணி கதறுகிறது.

எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு இந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்படவில்லை என்பதும், சசிகலா குடும்பத்தாரின் ஆதிக்கம், தமிழக அரசில் எதிரொலிக்கும் என்பதே இந்த குற்றச்சாட்டுக்குக் காரணம் என்பது அனைத்து தமிழர்களும் நன்கறிவர்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தாலும், மறைமுகமாக பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவின் அதிகாரமும், நேரடியாக அதிமுக துணைப் பொதுச் செயலராக இருக்கும் டிடிவி தினகரனின் அதிகாரமும் தமிழக அரசின் மீது நிச்சயம் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றுதான் அரசியல் பார்வையாளர்கள் தங்கள் கருத்தாக முன் வைக்கிறார்கள்.

இதற்கு முன்பு நம்மை ஆண்டவர்கள் யாரின் கைப்பிடியில் இருந்தார்களோ, அவர்களது கைப்பிடியில்தான் தற்போது நம்மை ஆளப்போகும் நபர்களும் இருக்கப் போகிறார்கள் என்றும் மக்கள் ஆங்காங்கே பேசுவதையும் கேட்க முடிகிறது.

இந்த நிலையில், மக்களின் தேவைகள், தமிழகத்தில் மேற்கொள்ளப் பட வேண்டிய போர்க்கால நடவடிக்கைகள், கடந்த ஒரு சில மாதங்களாக இயங்காத அரசு எந்திரத்தை உடனடியாக இயக்கி பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்வதில் எடப்பாடி பழனிசாமி ஈடுபடுவது, எதிர் அணியினரின் குற்றச்சாட்டுகளையும், அரசியல் பார்வையாளர்களின் கணிப்புகளையும் பொய்யாக்க வேண்டும் என்பது மட்டுமே, அதிமுகவுக்கு வாக்களித்த மக்களின் ஏகோபித்த விருப்பம்.

மக்களின் ஆதரவு பெற்று ஒரு அணியாக இருந்து, நல்லது செய்வதை விட, மக்களுக்கு அதிருப்தி அணியில் இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்யும்பட்சத்தில் அது அதிக ஆதரவையும், மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எதிர் அணியின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி, தமிழக எந்திரத்தை உடனடியாக இயக்க எடப்பாடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com