தேவாலயப் பணம் கையாடல்: பாதிரியாருக்கு 2 ஆண்டு சிறை

கோவையில், தேவாலயத்தின் பணத்தைக் கையாடல் செய்த வழக்கில் பாதிரியாருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.21 லட்சம் அபராதமும் விதித்து, கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது

கோவையில், தேவாலயத்தின் பணத்தைக் கையாடல் செய்த வழக்கில் பாதிரியாருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.21 லட்சம் அபராதமும் விதித்து, கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
கோவை, காளப்பட்டி பகுதியில் செயின்ட் செபாஸ்டியன் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் பாதிரியாராகவும், தேவாலயத்துக்கு சொந்தமான பள்ளியின் முதல்வராகவும் 2009 முதல் 2011 வரை பணியாற்றியவர் ஜான் போஸ்கோ (76).
பணிக் காலத்தின்போது, இவர் பள்ளிப் பேருந்தை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும், புதிதாக கட்டடம் கட்டுவதாகக் கூறி பணம் வசூலித்ததாகவும், தேவாலய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைக் கையாடல் செய்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
ஜான் போஸ்கோ ரூ.10 லட்சம் கையாடல் செய்திருப்பதாக, தேவாலயத்தின் உறுப்பினரான ஜெரால்டு பூபாலன் என்பவர் கோவை குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து, பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில், மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் ஜான் போஸ்கோ மீது 2011-இல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், பாதிரியார் ஜான் போஸ்கோவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.21 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி மதுரசேகர் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com