பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை (பிப்.18) நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை (பிப்.18) நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.
இதற்காக சட்டப் பேரவையை காலை 11 மணிக்குக் பேரவைத் தலைவர் பி.தனபால் கூட்டியிருப்பதாக சட்டப் பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:சட்டப் பேரவையின் கூட்டத்தை வரும் சனிக்கிழமை (பிப். 18) காலை 11 மணிக்கு, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் பி.தனபால் கூட்டியிருக்கிறார்.
அப்போது, அமைச்சரவை மீது நம்பிக்கைத் தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்று தனது அறிவிப்பில் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
பேரவையில் என்ன நடைபெறும்? சட்டப் பேரவை கூடியதும், அமைச்சரவை மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்மொழிவார். இந்தத் தீர்மானம் வழிமொழியப்பட்டு அது வாக்கெடுப்புக்கு விடப்படும்.
பல்வேறு அரசியல் திருப்பங்கள், குழப்பங்கள், சிக்கல்களுக்கு நடுவே நடைபெறும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் என்பதால் குரல் வாக்கெடுப்புக்குப் பதிலாக எண்ணிக் கணிக்கும் முறையே பின்பற்றப்படும் என்று சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எண்ணிக் கணிக்கும் முறை....: முதல்வரால் முன்மொழியப்படும் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்க அறிவுறுத்தப்படுவர். இதற்கு முன்பாக, ஆளும்கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படும். அதாவது, முதல்வரால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டுமென்ற உத்தரவை கொறடா பிறப்பிப்பார்.
தீர்மானத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பான கருத்துகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எடுத்துரைப்பார். இதன் பின்பு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
பிரிவு வாரியாக நடத்தப்படும்: தலைமைச் செயலகத்தில் இப்போதுள்ள பாரம்பரிய சட்டப் பேரவை மண்டபமானது, ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், 234 உறுப்பினர்கள் அமர்ந்துள்ளனர்.
எண்ணிக்கை கணிக்கும் முறைப்படி, ஒவ்வொரு பிரிவு வாரியாக உறுப்பினர்களை எழுந்து நிற்கச் சொல்லும் பணியை சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் மேற்கொள்வார். அதில், ஆதரிப்போர், எதிர்ப்போர் என இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பார். ஆதரிப்போர் எனக் கூறியவுடன் எழுந்து நிற்போரின் பெயர்களை வாசித்து அதனை உறுதி செய்து கொள்வார்.
இவ்வாறு ஒவ்வொரு பிரிவிலும் ஆதரிப்போரின் எண்ணிக்கை கணிக்கப்பட்டு அவை மொத்தமாக கூடுதல் செய்யப்படும்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும்....
எம்.ஜி.ஆர். மரணத்துக்குப் பிறகு ஒரே மாதத்தில் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர். கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பரில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, 1988-ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். அவரது அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டது. திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில், இந்திரா காங்கிரஸைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் பதவியை ராஜிநாமா செய்ததாக பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவையில் பெரும் கைகலப்பு ஏற்படவே, 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திய அவைத் தலைவர், ஜானகி ராமச்சந்திரன் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சட்டப் பேரவையில் இப்போதுதான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படுகிறது.
கடந்த 2006-2011-ஆம் ஆண்டு 100-க்கும் குறைவான உறுப்பினர்களைப் பெற்றிருந்த போதும், காங்கிரஸ் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைத்தது.
அப்போதுகூட சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது


சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்தார்.
திருப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள ஆட்சி எத்தனை நாள்கள் இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியாது. சட்டப் பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவளிக்காது. எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ.பன்னீர்செல்வம் என முதல்வராக யார் வந்தாலும் ஆதரவு கிடையாது.
தமிழகத்தின் எதிர்கால அரசியல் திமுகவின் வெற்றியைப் பொருத்தே அமையும். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்றார்.

காங்கிரஸ் நிலை என்ன?
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று அக் கட்சியின் பேரவை கொறடா விஜயதரணி கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியது: பேரவையில் நடைபெறும் வாக்கெடுப்பில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெறும் என்றுதான் நம்புகிறேன். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதைவிட அதிகமாக மொத்தம் 124 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எங்களின் ஆதரவு தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்களிடமும் ஆதரவு யாரும் கோரவில்லை. தற்போதைய சூழலை முழுமையாகக் கவனித்து வருகிறோம் என்றார்.

எவ்வளவு கிடைக்க வேண்டும்?


சட்டப் பேரவையில் பெரும்பான்மை கிடைக்க 117 உறுப்பினர்களுக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும்.
அதன்படி, அதிமுகவுக்கு 124 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அமைச்சர் டி.ஜெயகுமார் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதேசமயம், அதிமுகவில் இருந்து அதிருப்தியாக பிரித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு 10 உறுப்பினர்கள் (அவருடன் சேர்த்து) ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிருப்தி அணியைச் சேர்ந்தவர்கள், அதிமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.
அவர்கள் பேரவையில் கொறடா உத்தரவை மீறிச் செயல்படும் பட்சத்தில் அவர்களது சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்படக் கூடும்.
ஆனாலும், இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிருப்தி அணியினரிடம் உரிய விளக்கங்கள் கோரப்பட்டு அவர்களை தகுதி நீக்கம் செய்யவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், நம்பிக்கை வாக்கு கோரும் போது, அதிருப்தி அணியைச் சேர்ந்த 10 சட்டப் பேரவை உறுப்பினர்கள் பிரச்னையில் ஈடுபடலாம் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com