'பொதுத் தேர்தலால் மட்டுமே தமிழகத்துக்கு நிரந்தரமான ஆட்சியைத் தர முடியும்'

பொதுத் தேர்தலால் மட்டுமே நிரந்தரமான ஆட்சியை தமிழகத்துக்குத் தர முடியும் என்றார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.
கூட்டத்தில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.
கூட்டத்தில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

பொதுத் தேர்தலால் மட்டுமே நிரந்தரமான ஆட்சியை தமிழகத்துக்குத் தர முடியும் என்றார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.
நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரணத்தை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
டயர் ரீட்ரேடிங் தொழில் நிறுவனங்கள் நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் ஏராளமாக உள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் ரீட்ரேடிங் ரப்பரை அதிக விலைக்கு விற்கிறது. இதனால் ரீட்ரேடிங் கட்டணம் உயர்ந்து தொழில் பாதிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்கள் கருத்தைக் கேட்டுதான் முடிவு செய்திருக்க வேண்டும். மக்கள் விரும்பினால், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினரை திரும்பப் பெறும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.
அதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காகப் பணியாற்றுவர், ஒழுக்கத்துடனும் இருப்பர்.
அதிமுக உள்கட்சிப் பிரச்னையில் திமுக பின்னணியில் இயக்குகிறது என்பதற்கு எவ்வித முகாந்திரமும் தெரியவில்லை. அதிமுக என்றாலே திமுகவின் எதிர்ப்பு அரசியல்தான் என்ற நிலையில், அதிமுகவினர் இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதைப் பார்த்தால், மக்களுக்கு பாஜக மீது ஒருவித சந்தேகம் எழத்தான் செய்யும்.
அதேபோல், பாஜக தலைவர்கள் சிலர் நேரடியாகவே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசி வருவதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு திடீரென சசிகலா மீது ஏன் இவ்வளவு ஆர்வம்? எனத் தெரியவில்லை. சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்றெல்லாம் பேசி வருகிறார்.
எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையில் உள்ள பாஜகவினர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர்.
பொதுத் தேர்தல் மட்டும்தான் நிரந்தரமான ஆட்சியை தமிழகத்துக்கு தர முடியும். எடப்பாடி பழனிசாமி அல்ல, யார் முதல்வராக வந்தாலும் சசிகலா குடும்பத்தினர் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இந்தச் சூழலில் தமிழகத்தின் ஆட்சி எந்தவிதச் செயல்பாடும் இல்லாமல் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும்.
இப்படியொரு ஆட்சி, தமிழக மக்களுக்கு நல்லதல்ல. இதன் அடிப்படையில்தான் தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இதை வரவேற்கிறோம். கழகங்கள் இல்லாத ஆட்சி என்ற பாஜக பேசிவருவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றார். முன்னதாக, கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஈ.ஆர்.ஈஸ்வரன் பங்கேற்றுப் பேசினார். கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் சூர்யமூர்த்தி, மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com