மத்திய பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்பில்லை: டி.கே.ரங்கராஜன்

மத்திய அரசின் 2017 -18 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் பட்ஜெட் குறித்த விவாத கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சியில் (இடமிருந்து) மேலாண்மை இயக்குநர் கே.மாறன், முன்னாள் சட்டப்பேர
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் பட்ஜெட் குறித்த விவாத கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சியில் (இடமிருந்து) மேலாண்மை இயக்குநர் கே.மாறன், முன்னாள் சட்டப்பேர

மத்திய அரசின் 2017 -18 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.
சென்னை மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி வணிக மேலாண்மைத் துறை சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த விவாத கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில், டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:
மத்திய அரசு போதிய தொலைநோக்கு முயற்சி, மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது ஏழை, எளிய மக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டது. சிறு, குறுந்தொழில்களை முடக்கி வேலைவாய்ப்புகளை இழக்க வைத்துள்ளது.
அமெரிக்கா தனது பொருளாதார நிலையற்ற தன்மையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனும் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் உலகச் சந்தை சுருங்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி நிலையற்ற பொருளாதாரச் சூழ்நிலையை எச்சரிக்கையுடன் கையாளும் வகையில், தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமல் உள்ளது. இதனால் உற்பத்தித் துறை பலவீனப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளது.
ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்து இருப்பது மட்டும் புதுமை அல்ல. ரயில்வே துறையை சேவைப்பிரிவில் இருந்து வணிக நோக்குடன் செயல்படும் துறையாக மாற்றி, தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் புதுமை தான்.
இனி ரயில்வே கட்டணம் மாதாமாதம் உயர்த்தப்பட்டாலும் வியப்பில்லை.
கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க, கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.38,500 கோடியைவிட ரூ.9 ஆயிரம் கோடி அதிகமாக செலவிடப்பட்டது. அந்தத் தொகை தான் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தொகையாக, ரூ.47,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த பட்ஜெட்டில் ராணுவ ஆராய்ச்சி, வளர்ச்சித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் குறைத்து, அந்த நிதி தான் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர, கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை.
ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை என்ற பெயரில் யாரோ சம்பாதிக்க வகை செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்தக் கருத்தரங்கில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், பாஜக மாநிலச் செயலர் கே.டி.ராகவன், பத்திரிகையாளர் சந்திரன், சாய்ராம் பொறியியல் கல்லூரி வணிக மேலாண்மைத் துறை இயக்குனர் மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com