விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எடப்பாடி

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (63) சேலத்தை அடுத்த எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் 1954-இல் பிறந்தார்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எடப்பாடி

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (63) சேலத்தை அடுத்த எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் 1954-இல் பிறந்தார். பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கருப்பக் கவுண்டர், தாய் தௌசயம்மாள். மனைவி ராதா. இவருக்கு மிதுன்குமார் என்ற மகன் உள்ளார்.
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தபோது, ஜெயலலிதா அணியில் இணைந்து சேவல் சின்னத்தில் எடப்பாடியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து, 1991 தேர்தலில் வெற்றி பெற்ற இவர்,
1996 மற்றும் 2006 சட்டப்பேரவைத் தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் இருமுறை தோல்வியடைந்தார். பின்னர், 2004-இல் சிமெண்ட் வாரியத் தலைவராகவும், 1992 முதல் 1996 வரை ஆவின் தலைவராகவும் இருந்தார்.
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்று, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
தொடர்ந்து, 2016-இல் எடப்பாடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றம் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
அதிமுகவின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் கே.ஏ.செங்கோட்டையன்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் (69). கடந்த 1948-ஆம் ஆண்டு கே.எஸ்.அர்த்தநாரீஸ்வரன் கவுண்டர்-காளியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். மனைவி ஈஸ்வரி. மகன் கதிரீஸ்வரன்.
முதன் முதலாக, சத்தியமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த 1977-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 1980, 1984, 1989, 1991, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.
இவர், 1991-1996 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராகவும், பின்னர் 2011- 2016 அதிமுக ஆட்சியில் வேளாண் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய்த் துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அமைச்சர் பதவி மற்றும் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 2016 தேர்தலில் வெற்றி பெற்றாலும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை; தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com