திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளை - சபாநாயகர் முற்றுகை - அவை ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளை - சபாநாயகர் முற்றுகை - அவை ஒத்திவைப்பு

சென்னை:

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது பேரவை சிறப்புக்கூட்டம். இதில் 230 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.  

மிகுந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதால், அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக சட்டப்பேரவை வளாகம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேரவை கூடியதும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. அப்போது ஓபிஎஸ் ஆதரவு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள செம்மலையை பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறி ஸ்டாலின் முழக்கமிட்டார். இதற்கு ஆதரவாக திமுக உறுப்பினர்களும், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே யார் பேசுவது என்பதில் கடும் அமளி ஏற்பட்டது. பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பேச அனுமதி கோருவதால் அமளி ஏற்பட்டுள்ளது.

திமுக, காங்கிரஸ், மற்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பன்னீர்செல்வம் அணியினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி மீண்டும் வலியுறுத்தி வந்தனர்.  

இந்நிலையில், பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். மற்ற கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டதால் பேரவையில் அமளி ஏற்பட்டது. பேரவையில் கடும் அமளிக்கிடையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக சட்டப்பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து வெளிப்படை வாக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கியது.

உறுப்பினர்கள் 6 பிரிவுகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். முதல் மூன்று பிரிவுகளில் அதிமுகவினரும், மற்ற மூன்று பிரிவுகளில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமர்ந்தனர்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓபிஎஸ் அணி கொறடா செம்மலை கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் செம்மலை வேண்டுகோள் விடுத்தார். செம்மலை பேச்சுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

உறுப்பினர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும், எம்.எல்.ஏக்களின் உரிமை, மாண்பு பாதுகாக்கப்படும் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.

இதையடுத்து தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் உரையாற்ற தொடங்கினர்.

ஸ்டாலின் உரை: சிறைக்கதிகளை போல் எம்எல்ஏக்கள் அழைத்து வரப்பட்டதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்றும். 15 நாள்கள் அவகாசம் நிலையில், அவசரமாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவது ஏன்? நம்பிக்கை வாக்கெடுப்பை வேறொரு நாளில் நடத்த வேண்டும். இன்று நடத்தக்கூடாது என்றார். எம்.எல்.ஏ.,க்கள் என்ன சிறைக்கைதியா எனவும் கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் மறுப்பு:  ஸ்டாலின் கோரிக்கையை சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார்.

பன்னீர்செல்வம் உரை: ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும். எம்எல்ஏக்கள் தொகுதிக்குச் சென்று பொதுமக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே, பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். மேலும் கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். மக்களின் குரலை பதிவு செய்ய வேண்டும் என்றார் பன்னீர்செல்வம் கூறினார்.

காங்கிரஸ் ராமசாமி உரை: ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவர் கே.ஆர்.ராமசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
சபாநாயகர் மறுப்பு: ரகசிய வாக்கெடுப்பு நடத்தவும் வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கை சபாநாகர் தனபால் மறுத்துவிட்டார். மேலும் எவ்வாறு வாக்கெடுப்பு நடத்துவது என்பது சபாநாயகரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது என தனபால் கூறியுள்ளார்.

சபாநாயகர் மறுப்பு: ரகசிய வாக்கெடுப்பு நடத்தவும் வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கை சபாநாகர் தனபால் மறுத்துவிட்டார். மேலும் எவ்வாறு வாக்கெடுப்பு நடத்துவது என்பது சபாநாயகரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது என தனபால் கூறியுள்ளார்.

துரைமுருகன் உரை: ஸ்டாலின் காரை போலீஸார் சோதனை செய்தது ஏன்? சோதனை செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சோதனை குறித்து விளக்கமளிக்க வேண்டும். அசாதாரண சூழல் நிலவுவதால் அனைவரும் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று பேசினார்.

நட்ராஜ் உரை: மக்களை சந்திக்க எம்.எல்.ஏக்களை அனுமதிக்க வேண்டும் என மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

பேரவை தொடங்கி 1 மணி நேரத்தை கடந்தும் வாக்கெடுப்பு தொடங்கவில்லை.

இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேச அழைக்கப்பட்டனர். இந்நிலையில், ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்தி சபாநாயகரை முற்றுகையிட்டு கடும் ரகளையில் திமுக உறுப்பினர்கள் ஈடுபட்டு வந்தனர். எதிர்கட்சி உறுப்பினர்களின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காகிதங்களைக் கிழித்தெறிந்தும் மேசையின் மீதும் இருகைகளையும் தட்டி ஒலி எழுப்பினர். நம்பிக்கை வாக்கெடுப்பினை வேறொரு நாளில் நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தவும் கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர் பூங்கோதை மேசையின் மீதேறி கோஷங்களை எழுப்பினர்.

மேலும், இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க தலைமைச் செயலகத்தை நோக்கி செல்லும் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரவை வளாகத்தைச் சுற்றிலும் அதிரப்படையைச் சேர்ந்த 200 போலீஸார் குவிக்கப்பட்டனர். கூடுதலாக ஆயிரம் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டதுடன் அவரது இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவையிலிருந்து சபாநாகர் தனபால் வெளியேறினார்.

மயக்கமடைந்த பேரவை ஊழியர்: பேரவையில் நடந்த ரகளையில் பேரவை ஊழியர் பாலாஜி மயக்கமடைந்தார். இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி ஆலோசனை: அவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதால், சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளியே வந்து, பிறகு பேரவைக்குள் சென்றனர். இந்த இடைவெளியில் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

திமுக உறுப்பினர்களின் போராட்டத்திற்கும் கோஷத்திற்கும் அதிமுகவினர் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வாக்களிப்பில் பங்கேற்றவர்களில் 50 சதவீதத்திற்கும் கூடுதல் ஆதரவு தேவை. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறப்போவது யார்? என்பது தமிழகம் முழுவதும் பரபரப்புடன் எதிர்பார்ப்பு நிலவியது.

பேரவை கூடியது: இந்நிலையில் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட பேரவை மீண்டும் மதியம் 1 மணியளவில் கூடியது.

சபாநாயர் வேதனை: அவையில் எனக்கு நேர்ந்த கொடுமையை நான் எங்கே சென்று முறையிடுவது. அவை விதிகளின்படி தான் அவையை நடத்த கடமைப்பட்டுள்ளேன் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.

பேரவைக்குள் காவல்துறையினர் செல்ல ஆலோசனை: பேரவைக்குள் காவல்துறையினர் செல்ல தயார் நிலையில் வெளியே காவல்துறையினர் செல்ல ஆலோசனை நடத்தி வந்தனர்.

திமுகவினர் வெளியேற்றம்: சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சட்டப்பேரவையின் மாண்புகளை சீர்குலைத்ததால் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தனபால் கூறியுள்ளார். திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றப்படும்போது திமுக உறுப்பினர்களும், அவைக் காவலர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தீர்மானம் முன்மொழிவு: பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
திமுக உறுப்பினர்களும், அவைக் காவலர்களுமக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மீண்டும் அவை ஒத்திவைப்பு: திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறினர். சபாநாயகர் இருக்கையை இரண்டாவது முறையாக முற்றுகையிட்டு திமுகவினர் கோஷங்களை எழுப்பினர். சபாநாயகரின் மைக் 2வது முறையாக உடைக்கப்பட்டது. அமைச்சர்களின் மீது திமுக உறுப்பினர்கள் ஏறி நின்று ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். மீண்டும் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் பேரவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பட்டது.

மீண்டும் அவை கூடும்போது திமுக உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், அவர்கள் அவையை விட்டு வெளியே வராமல் உள்ளிருப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

வலுக்கட்டாயமாக திமுகவினர் வெளியேற்றம்: அவையை விட்டு வெளியே வராமல் உள்ளிருப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வந்த திமுக உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், நந்தகுமார், சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுகவினர் ஒவ்வொருவராக வலுக்கட்டாயமாக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

வெளியேற்றப்பட்டும் வரும் திமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவைக்குள்ளே தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com