பட்டாசு கடைகளுக்கு புதிய விதிமுறைகள்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இன்று முதல் ஆலைகளை மூடி போராட்டம்

பட்டாசுக் கடைகளுக்கான புதிய விதிமுறைகளை கண்டித்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் சனிக்கிழமை முதல் மூடி போராட்டம் நடத்த இருப்பதாக, அனைத்திந்திய

பட்டாசுக் கடைகளுக்கான புதிய விதிமுறைகளை கண்டித்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் சனிக்கிழமை முதல் மூடி போராட்டம் நடத்த இருப்பதாக, அனைத்திந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும்
விற்பனையாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி, பொதுச் செயலர் மாரியப்பன் ஆகியோர் வெள்ளிக்கிழமை கூறியது:
பட்டாசு கடையைச் சுற்றி 10 அடி இடைவெளி வேண்டும். கடையில் மாடியே இருக்கக் கூடாது. இரண்டு அவசர வழி இருக்க வேண்டும். கடையைச் சுற்றி 15 மீட்டர் தூரத்துக்குள் மக்கள் அதிகமாக கூடும் இடம் இருக்கக் கூடாது என பட்டாசுக் கடைகளுக்கு புதிய வரைவு சட்டத் திருத்த விதிகளை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையில் அனுமதி பெற்று நாடு முழுவதும் 3048 பட்டாசுக் கடைகள் உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம் பெற்ற கடைகள், நாடு முழுவதிலும் சுமார் 1.50 லட்சம் உள்ளன. பட்டாசு தயாரிப்பு, லாரி போக்குவரத்து, விற்பனை என சுமார் 1 கோடி பேருக்கு பட்டாசுத் தொழில் வாழ்வாதாரமாக உள்ளது.
தற்போது, நாட்டில் உள்ள அனைத்துப் பட்டாசு கடைகளும் சட்டப்பூர்வமாக இயங்கி வருகின்றன. இத்தனை ஆண்டுகளாக உள்ள விதிமுறைகளை அடியோடு மாற்றிவிட்டு, நடைமுறைக்கு சாத்தியமற்ற விதிமுறைகளை உருவாக்கியுள்ளனர். இதனால், நாட்டில் உள்ள அனைத்து பட்டாசுக் கடைகளும் ஒரே நாளில் மூடப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 870 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலை செய்து வருகிறார்கள்.
இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள எங்களை கலந்து ஆலோசிக்காமல் அதிகாரிகள் தனிச்சையாக விதிகளை வகுத்துள்ளனர். எனவே மத்திய மாநில அரசு இந்த புதிய விதிமுறைகளை கைவிட வேண்டும்.
இந்த புதிய விதிமுறைகளை கண்டித்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் சனிக்கிழமை முதல் காலவறையின்றி மூடப்படும் என்றனர்.
பேட்டியின் போது, லாரி செட் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ராஜூ, தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி கண்ணண், சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com