வறண்டது வீராணம் ஏரி: சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

வீராணம் ஏரி வறண்டு போனதால் இன்னும் ஒரு நாளுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் வழங்க முடியும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வறண்டது வீராணம் ஏரி: சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

வீராணம் ஏரி வறண்டு போனதால் இன்னும் ஒரு நாளுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் வழங்க முடியும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரானது கீழணை, வடவாறு வழியாகக் கொண்டுவரப்பட்டு இந்த ஏரியில் தேக்கப்பட்டு, பாசனம் மற்றும் சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஏரியின் மொத்த கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடி ஆகும். உயரம் 47.50 அடி.
இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நிகழாண்டு கர்நாடக அரசு காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறக்காததாலும், பருவ மழை பொய்த்ததாலும், மேட்டூரிலிருந்து உரிய அளவில் நீர் திறக்கப்படவில்லை. குறைந்த அளவே பெய்த மழைநீர், காவிரியிலிருந்து வந்த குறைந்தளவு நீர் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கீழணைக்கு சுமார் 10 தினங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.
சென்னை நகரின் கோடைக்கால குடிநீர்த் தேவையைக் கருதி, கீழணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படாமல், வீராணம் ஏரிக்கு நீர் கொண்டு வரப்பட்டு தேக்கி வைக்கப்பட்டது.
குறைந்தளவு மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு, சென்னைக்கு வழங்கப்பட்டு வந்தது. ஏரியிலிருந்தும் பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை.
மழை இல்லாததால், ஏரியின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வந்தது.
சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக ஏரியிலிருந்து தினமும் விநாடிக்கு 77 கன அடி நீர் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், தற்போது நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
இதனால், கடந்த சில நாள்களாக சென்னைக்கு விநாடிக்கு 14 கன அடி நீர் மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை ஏரியின் நீர்மட்டம் 9 மில்லியன் கன அடியாகக் குறைந்துவிட்டது. இதனால், இன்னும் ஒருநாள் (சனிக்கிழமை) மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com