"பழந்தமிழ் இலக்கியங்களை ஏட்டில் கொண்டு வந்தவர் உ.வே.சா.'
By DIN | Published on : 19th February 2017 11:53 PM | அ+அ அ- |

உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சா. நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கிறார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.
பழந்தமிழ் இலக்கியங்களை ஏட்டு வடிவில் கொண்டுவந்த பெருமை உ.வே.சா.வையேச் சாரும் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.
தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் 163-வது பிறந்த நாளையொட்டி, பாபநாசம் அருகே உத்தமதானபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உ.வே.சா. சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்த பிறகு துணைவேந்தர் தெரிவித்தது:
தமிழ்த்தாத்தா என்று சொல்லும்போது அவருடைய தமிழ்ப்பணி நெஞ்சில் ஓடுகிறது. தமிழகத்தில் பல அறிஞர்களும் பெரியோர்களும் தமிழ்ப்பணி ஆற்றிவந்தாலும், தமிழ்த்தாத்தா ஆற்றிய தமிழ்ப்பணி எல்லாவற்றையும்விட சிறந்தது என மகாகவி பாரதியாரும், தாகூரும் போற்றியிருக்கின்றனர்.
அவர் ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்து அவற்றைப் பதிப்பிக்க எடுத்துக்கொண்ட முயற்சி மிகப்பெரியது. ஓலைச்சுவடிகளைச் சேகரிப்பதற்காக ஊர் ஊராகச் சென்று, பெற்றுவந்து அவற்றை இனங்கண்டறிந்தது மட்டுமல்லாமல், அவற்றையெல்லாம் பதிப்பித்துச் சிறப்பித்துள்ளார்.
அதற்காக அவருக்கு 1905 ஆம் ஆண்டு மகாமகோபாத்தியாய என்ற பட்டம் வழங்கப்பட்டது. சென்னை மாநிலக் கல்லூரியில் இப்பட்டம் வழங்கியபோது மகாகவி பாரதி ஒருதாளில் பென்சிலால் மூன்று கவிதைகளை அங்கேயே படைத்து அவருக்குச் சிறப்புச் செய்தார்.
இதே பாரதி, 1918 ஆம் ஆண்டில் தமிழ்த்தாத்தாவைச் சந்தித்த வேளையில், நான் புதுமைக் கவிஞர், நீங்களோ பழம்பெரும் இலக்கியங்களைக் கட்டிக் காத்துவரும் ஒரு வீரன் என்று பாராட்டியுள்ளார். அதேபோல, 1919 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்த தாகூர் உ.வே.சா.வைப் பார்த்து ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றையெல்லாம் கண்டறிந்து தமிழர்களின் பண்பாட்டுச் சொத்துக்களை கட்டிக் காக்கிற நீங்கள் உள்ளபடியே ஓர் அகத்தியன் என்று பாராட்டியிருக்கிறார்.
தமிழ் இன்று நெஞ்சம் நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு காரணம் பழந்தமிழ் இலக்கியங்கள்தான். அவற்றை ஏட்டு வடிவில் கொண்டுவந்த பெருமை உ.வே.சா.வையே சாரும் என்றார் துணைவேந்தர்.
இந்நிகழ்ச்சியில், ஓலைச்சுவடி துறைத் தலைவர் மோ.கோ. கோவைமணி, தொலைநிலைக் கல்வி இயக்குநர் சி. சுந்தரேசன், பேராசிரியர்கள் சா. உதயசூரியன், இரா. முரளிதரன், பா. ஜெயக்குமார், வீ. இளங்கோ, த. கலாஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உ.வே.சா.வுக்கு மரியாதை செலுத்தினர்.