ஜனநாயகத்துக்கு எதிரான வாக்கெடுப்பு: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் புகார்

தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
ஜனநாயகத்துக்கு எதிரான வாக்கெடுப்பு: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் புகார்

தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
பேரவையில் திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாகக் கூறி, ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், திமுக பேரவை உறுப்பினர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முறையிட்டனர். இதைத் தொடர்ந்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி ஆளுநரைச் சந்தித்து தாக்குதல் சம்பவம் தொடர்பான மனுவை அளித்தார்.
மனுவில் தெரிவித்துள்ளதாவது: அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மனசாட்சியோடும், சுதந்திரமாகவும் வாக்களிக்க இயலாது என்ற அடிப்படையில் ரகசிய வாக்கெடுப்பு கோரினோம். ஆனால், பேரவைத் தலைவர் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல், எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பை நடத்த முயற்சித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பேரவைத் தலைவரின் உத்தரவுப்படி, காவல் துறையினர் பேரவைக்குள் நுழைந்து திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கையால் திமுக உறுப்பினர்கள் பலர் காயமடைந்தனர்.
அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: திமுகவினரை வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்துவிட்டார் என்று அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. இது முற்றிலும் ஏமாற்று நாடகம்; அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, ஜனநாயக மாண்புகளை மீட்டெடுக்கும் வகையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏதுவான வகையில் சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கிழிந்த சட்டையுடன்: முன்னதாக, பேரவை வளாகத்தில் கிழிந்த சட்டையுடன் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
சட்டப்பேரவை கூடியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினோம். அதற்கு பேரவைத் தலைவர் இடம் தரவில்லை. பின்னர் கூச்சல் குழப்பத்தின் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.
வருத்தம் தெரிவித்தேன்: பின்னர் நானே நேரடியாக பேரவைத் தலைவர் தனபாலின் அறைக்குச் சென்று தெரிந்தோ, தெரியாமலோ நடைபெற்ற இந்தச் சம்பவத்துக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்; வருத்தம் தெரிவிக்கிறேன் என்றேன்.
பேரவையை முறையாக நடத்தி, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், மீண்டும் அவை கூடியதும், திமுகவினர் மீது பேரவைத் தலைவர் குற்றஞ்சாட்டினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது பேரவை மீண்டும் 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பேரவைத் தலைவரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சட்டபேரவைக்குள் அறப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். திடீரென 500 காவலர்கள் பேரவைக்கு உள்ளே நுழைந்து அடித்து, உதைத்து, துன்புறுத்தி, ஷூ கால்களால் மிதித்து திமுகவினரை வெளியேற்றினர். கூடுதல் காவல் ஆணையர் சேசஷாயின் உத்தரவின் பேரில் காவலர்கள் எங்களைத் தாக்கினர் என்றார் அவர்.
ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்: சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, கிண்டிக்கு வந்த திமுக பேரவை உறுப்பினர்களும், மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா உள்ளிட்ட நிர்வாகிகளும் ஆளுநர் மாளிகை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களுடன் போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதும் திமுகவினர் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com