திருச்சி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு: 1100 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் லால்குடி, தேனி மாவட்டம் அய்யம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடி, பழனியை அடுத்த பெரியகலையமுத்தூர் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில், 1080-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 12 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
ஏ.வெள்ளோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையைப் பிடிக்க மல்லுக்கட்டிய இளைஞர்கள்.
ஏ.வெள்ளோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையைப் பிடிக்க மல்லுக்கட்டிய இளைஞர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி, தேனி மாவட்டம் அய்யம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடி, பழனியை அடுத்த பெரியகலையமுத்தூர் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில், 1080-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 12 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
லால்குடி, தெற்கு வீதி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறிய காளைகளை அடக்க ஆர்வம் காட்டிய வீரர்கள், காங்கயம் காளை போன்ற பெரிய காளைகளை அடக்க முன்வரவில்லை. ஒரு சில காளைகள், வாடிவாசலை விட்டு வெளியே வந்து வீரர்களை விரட்டியது.
இதில், புள்ளம்பாடி ஊவனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துடையார் மகன் சின்னராசு (42), துவாக்குடி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் அழகப்பன் (22) உள்பட 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர்கள் சிகிச்சை அளித்தனர். பலத்த காயமடைந்த சின்னராசு, அழகப்பன் ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விழாவில், சிறப்பு பார்வையாளராக திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்புப் பணியில் 450 போலீஸார் ஈடுபட்டனர்.


அய்யம்பட்டியில் காளை சாவு:

தேனி மாவட்டம், அய்யம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 430 காளைகள் பங்கேற்றன. இதில், 52 பேர் காயமடைந்தனர், ஒரு காளை டிராக்டரில் மோதி உயிரிழந்தது.
அய்யம்பட்டி வல்லடிக்கார சுவாமி-ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம், ஜல்லிக்கட்டை தொடக்கி வைத்தார். முதலில், ஆண்டிச்சாமி கோயில் காளைகளும் அதைத் தொடர்ந்து, மதுரை, தேனி, திருச்சி, கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 430 காளைகளும் களமிறக்கப்பட்டன.
அதேபோல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 570 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அதில், 430 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.


சில மாடுபிடி வீரர்களும் பரிசுகளை வென்றனர். இருப்பினும், 52 வீரர்கள் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்த விஜயகாந்த் (22), மதுரை ஆரப்பாளையம் ரமேஷ் ராஜா (20), ஆனந்த், சதீஸ்குமார் ஆகிய 4 பேர் தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு நடைபெற்றபோது, உசிலம்பட்டியைச் சேர்ந்த பெரியசாமியின் காளை, கலெக்ஷன் பாய்ன்ட்டை நோக்கி வேகமாக ஓடி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது மோதியுள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த காளை, சம்பவ இடத்திலேயே இறந்தது.
திண்டுக்கல், பழனியில் ஜல்லிக்கட்டு: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அடுத்துள்ள ஏ.வெள்ளோடு புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்தும் 300 காளைகள் பங்கேற்க பதிவு செய்யப்பட்டிருந்தன.
ஜல்லிக்கட்டுக்கு வந்த காளைகளை, மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது 9 காளைகளை தவிர்த்து, மற்ற 147 காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.
இதில், 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகளைப் பிடிக்க முயன்றதில் காயமடைந்த 21 பேருக்கு தாற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் பலத்த காயமைடந்த 4 பேர், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேபோல், பழனியை அடுத்த பெரியகலையமுத்தூரில் உள்ள அருள்மிகு ஹைகோர்ட் காளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியை சார்-ஆட்சியர் வினீத் தொடக்கி வைத்தார். கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பழனி, ஆண்டிபட்டி, சிவகங்கை, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை பிடிக்க நூற்றுக்கணக்கான வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இவர்களில், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த உதயகுமார் (35), அவனியாபுரத்தைச் சேர்ந்த ரவியரசன் (24), தென்னரசு (24), சிவா (24) மற்றும் சிலர் காயமடைந்தனர்.
அரசு நிபந்தனைகளுக்கேற்ப தடுப்புகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com