நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகம் பங்கேற்றாரா..?

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால்

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கந்தர்வகோட்டை அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகம் பங்கேற்றாரா? என புதிய சந்தேகத்தை திமுக எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவின் கவனத்துக்கும் திமுக கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சனிக்கிழமை (பிப்.18) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதன் மூலம், தமிழகத்தில் ஒரு வார காலமாக நிலவி வந்த அசாதாரண சூழல் முடிவுக்கு வந்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.

சட்டப்பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியதும் பேரவைத் தலைவர் தனபால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிவார் என அறிவித்தார்.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினார். இதே கோரிக்கையை ஓ.பன்னீர்செல்வமும், காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர் ஆகியோரும் வலியுறுத்தினர்.

ஆனால், பேரவை விதிகளின்படியே செயல்படுவதாகக் கூறி, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க தனபால் மறுத்துவிட்டார். பின்னர், அதிமுகவின் உறுப்பினர்கள் அனைவரும் பயத்தில் இருப்பதாகவும், அதனால் வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்றும் திமுகவினர் வலியுறுத்தினர். அந்தக் கோரிக்கையையும் தனபால் நிராகரித்ததைத் தொடர்ந்து, பேரவையில் திமுக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால், அவை போர்க்களமானது.

திமுகவினரின் வன்முறை கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து 12.15 மணியளவில் அவையை மதியம் ஒரு மணிக்கு தனபால் ஒத்தி வைத்தார். மதியம் 1 மணிக்கு அவை கூடியபோதும் திமுகவினர் ரகளையை நிறுத்தவில்லை. இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை பழனிசாமி முன்மொழிந்தார். எனினும், ரகளை முடிவுக்கு வராததைத் தொடர்ந்து பேரவையை பிற்பகல் 3 மணிக்கு தனபால் ஒத்திவைத்தார். பிற்பகல் 2 மணியளவில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

பேரவை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியதும் சட்டப்பேரவை விதி 99 பிரிவு 3-இன் படி எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப் போவதாக தனபால் அறிவித்தார். அப்போது காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பிறகு, வாக்கெடுப்பு தொடங்குவதன் அடையாளமாக 3 முறை அழைப்பு மணி ஒலிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பேரவையின் நுழைவு வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. உறுப்பினர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று தனபால் உத்தரவு பிறப்பித்தார்.

சட்டப்பேரவையில் 6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு பகுதியாக வாக்கெடுப்பு நடைபெறும் என தனபால் கூறினார்.

அதன்படி, ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வாக்கெடுப்புத் தீர்மானத்தை ஆதரிப்போரை முதலில் எழுந்து நிற்கச் சொல்ல, அவரின் பெயர்களை பேரவைச் செயலாளர் ஜமாலூதீன் படித்து சரி பார்த்து, அவர்கள் எண்ணப்பட்டனர். பிறகு, தீர்மானத்தை எதிர்ப்பவர்களை எழுந்து நிற்கச் சொல்லி எண்ணப்பட்டது.

முதல் பகுதியில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து மொத்தம் 20 பேரும் எதிர்த்து 2 பேரும் வாக்களித்தனர். இரண்டாம் பகுதியில் ஆதரித்து 41 பேரும் எதிர்த்து 4 பேரும், மூன்றாம் பகுதியில் ஆதரித்து 47 பேரும் எதிர்த்து 4 பேரும், நான்காம் பகுதியில் ஆதரித்து 14 பேரும், எதிர்த்து ஒருவரும் வாக்களித்தனர்.

5, 6-ஆம் பகுதியில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதால் அந்த இருக்கைகள் காலியாகவே இருந்தன. நடுநிலை நிலைப்பாட்டை எந்த உறுப்பினரும் எடுக்கவில்லை.

வாக்குகளையும் எண்ணி முடித்த பிறகு 122 வாக்குகள் அதிகமாகப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதாக தனபால் அறிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 பேர் வாக்களித்தனர். அவர்களில், ஓ.பன்னீர்செல்வம், செம்மலை, நட்ராஜ், ஆறுக்குட்டி, சரவணன், மனோகரன், மாணிக்கம், எஸ்.பி.சண்முகநாதன், கே.பாண்டியராஜன், சின்னராஜ், மனோரஞ்சிதம் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தவர்கள் ஆவர்.

திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் லீக் வெளிநடப்பு செய்தது. இந்நிலையில், அதிமுகவுக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், உடல்நலக் குறைவால் நீண்ட நாட்களாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுமுகம் பேரவைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை என திமுக தரப்பில் புதிய சர்ச்சை எழுப்பப்படுகிறது.

ஆறுமுகம் வருகைபுரியாத நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு 121 ஆகத்தானே இருக்க முடியும்; அதெப்படி 122 ஆக இருக்கும்? என ஒரு சர்ச்சைக்கான கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த புதிய சர்ச்சையான கேள்வி சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்த கேள்விக்கு இதுவரை கந்தர்வகோட்டை ஆறுமுகம் எம்எல்ஏ தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கந்தர்வகோட்டை ஆறுமுகம் எம்எல்ஏ விவகாரம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்வைக்கு திமுக கொண்டு சென்றுள்ளது.

இது தொடர்பாக தான் விசாரிப்பதாகவும் உங்களுக்கு கூடுதல் தகவல் கிடைத்தால் தம்மிடம் பகிர்ந்து கொள்ளுமாறும் திமுக தரப்பிடம் ஆளுநர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com