பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்

பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் அனைவரையும் அவைக்காவலர்கள் குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றினர்.
தமிழக சட்டப்பேரவையிலிருந்து சனிக்கிழமை வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். உடன் திமுக எம்.எல்.ஏ.க்கள்.
தமிழக சட்டப்பேரவையிலிருந்து சனிக்கிழமை வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். உடன் திமுக எம்.எல்.ஏ.க்கள்.

பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் அனைவரையும் அவைக்காவலர்கள் குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றினர்.
தற்கொலை செய்துகொள்வோம் எனவும் அவைக் காவலர்களைத் திமுகவின் உறுப்பினர்கள் மிரட்டினர்.
சட்டப்பேரவை காலை 11 மணிக்கு தொடங்கியதில் இருந்தே திமுகவினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். பகல் 12.15 மணிக்கு ஒரு முறையும், 1.11 மணிக்கு ஒரு முறையும் திமுகவினரின் ரகளையால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் ஒரு மணிக்கு அவையை ஒத்திவைக்கும்போது, அவைக் காவலர்களை அழைத்து திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளியேறாமல் அவரவர் இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த அவைக்காவலர்கள் திமுகவினரை வெளியேற்ற முயற்சித்து, முடியாமல் பின்வாங்கிச் சென்றனர்.
பின்னர், சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் அவைக்குள் வந்த காவவலர்கள் திமுகவினரை வெளியேற்ற முயற்சித்தனர்.
அப்போது அவைக் காவலர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: இந்த ஆட்சியை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் தொலைபேசி வாயிலாகவும், நேரில் சந்தித்தும் என்னிடம் வலியுறுத்தினர். அதனால்தான் இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம். இதற்காக நாங்கள் இங்கு தற்கொலைகூட செய்துகொள்வோம். வீணாக அந்தப் பழியை நீங்கள் ஏன் சுமக்கிறீர்கள் என்றார்.
மேலும், துரைமுருகன் பேசும்போது, சின்ன பிளேடுகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அவற்றால் கிழித்துக் கொள்வோம். ரத்தத்தோடு வெளியேறுவோம். உங்கள் மீதுதான் வீணாகப் பழி வரும். விரைவில் ஆளுநர் ஆட்சி வர உள்ளது. பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
அதைத் தொடர்ந்து, அவைக்காவலர்கள் அனைவரும் வெளியேறினர். பின்னர், புதிதாக 250-க்கும் மேற்பட்ட அவைக்காவலர்கள் வரவழைக்கப்பட்டனர்.
குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர்: மு.க.ஸ்டாலின் அவையின் நடுமையத்தில் அமர்ந்து, பேரவையில் இருந்து எழுந்து வெளியேற மறுத்தார். அவரைச் சுற்றி திமுகவினர் அனைவரும் அரண்போல் அமர்ந்துகொண்டனர்.
ஆனால், அவைக் காவலர்கள் ஒவ்வொருவரையும் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று பேரவையில் இருந்து வெளியேற்றினர். இதில், பலர் சட்டை கிழிந்ததுடன், வேட்டிகளும் அவிழ்ந்து விழுந்தன. மு.க.ஸ்டாலினைத் தூக்கியபோது தலையில் அடித்துக் கொண்டே சென்றார். ஸ்டாலின் வெளியேற்றப்பட்டதும், மற்ற உறுப்பினர்களும் அவர்களாகவே வெளியேறிச் சென்றனர்.

காங்கிரஸ் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சனிக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
ஒத்திவைக்கப்பட்ட பேரவை சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி எழுந்து, சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. ரகசிய வாக்கெடுப்பு கோரினோம். இதில் என்ன தவறு இருக்க முடியும் என்றார்.
பேரவைத் தலைவர் தனபால்: என்னுடைய அறைக்குள் வந்து, நடைபெற்ற சம்பவம் தவறு என்பதுபோல பேசுகிறீர்கள். ஆனால், அவையில் வேறு மாதிரி பேசுகிறீர்கள் என்றார்.
பின்னர், திமுகவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதே காரணங்களுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கரும் வெளிநடப்பு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com