பேரவையில் திமுகவினர் ரகளை

தமிழக அமைச்சரவை மீது சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக, பிரதான எதிர்க்கட்சியான திமுக நிகழ்த்திய வரலாறு காணாத ரகளையால் பேரவை போர்க்களமாகக் காட்சி அளித்தது.
சட்டப் பேரவையில் நாற்காலியைத் தூக்கி அடிக்கும் திமுக எம்.எல்.ஏ.க்கள்.
சட்டப் பேரவையில் நாற்காலியைத் தூக்கி அடிக்கும் திமுக எம்.எல்.ஏ.க்கள்.

தமிழக அமைச்சரவை மீது சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக, பிரதான எதிர்க்கட்சியான திமுக நிகழ்த்திய வரலாறு காணாத ரகளையால் பேரவை போர்க்களமாகக் காட்சி அளித்தது. திமுகவினரின் ரகளையின்போது பேரவையிலிருந்த மைக் உடைக்கப்பட்டது.
பேரவைத் தலைவர் பி.தனபாலின் சட்டை கிழிக்கப்பட்டதுடன், அவர் மீது தாக்குதல் முயற்சியும் நடந்தது. மேலும், அவரது மேஜை தலைகுப்புற கவிழ்த்தப்பட்டு அதிலிருந்த மைக்குள் சேதப்படுத்தப்பட்டன. பேரவைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் திமுக எம்.எல்.ஏ.,க்களால் தூக்கி எறியப்பட்டன.
20 நிமிஷங்கள் நீடித்த வன்முறை: பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மூத்த அமைச்சர்களுக்கு முன்பாக போடப்பட்டிருந்த நீண்ட மேஜை மீது ஏறி நின்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் போட்டனர். வெளியேற்ற வந்த அவைக் காவலர்கள் மீது அவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். சுமார் 20 நிமிஷங்களுக்கு மேலாக நீடித்த இந்த வன்முறைகளால் சட்டப் பேரவையே கலவர பூமியாகக் காட்சி அளித்தது.
கோரிக்கை ஏற்க மறுப்பு: சட்டப் பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டுமெனில் ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் ஒரு வாரம் கழித்து வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிமொழிந்தார். பேரவை உறுப்பினர்கள் சுதந்திரமாக இல்லாமல் அச்சத்துடன் வாக்களிக்க வேண்டியுள்ளதால், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஓ.பி.எஸ்.ஸின் கருத்தை திமுக சார்பில் நானும் வழிமொழிகிறேன் என்றார் ஸ்டாலின்.
நல்ல தீர்ப்பு கொடுங்கள்-ஓபிஎஸ்: இதே கருத்துகளை காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, அவை நாகரிகம் கருதி சட்டப்பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் தெரிவித்த கருத்துகளை வெளியில் கூறியது கிடையாது. எங்களுக்கு பிரச்னை ஏற்பட்ட போது, என்னைச் சந்தித்த உறுப்பினர்களும், அமைச்சர்களும் தொகுதிக்குள் போக முடியவில்லை எனவும், மக்கள் திட்டுவதாகவும், ஏதாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்கள். ஆனால், கட்சிக் கட்டுப்பாட்டை காத்து வந்து அதனை வெளியே சொன்னதில்லை. எனவே, இப்போது பேரவைத் தலைவர் நல்ல தீர்ப்பினை வழங்க வேண்டும் என்று கையை மேலே தூக்கி கும்பிட்டு தனது பேச்சை முடித்தார்.
தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்திருந்த அதிமுக உறுப்பினர்கள் நட்ராஜ் (மயிலாப்பூர்), க.பாண்டியராஜன் (ஆவடி) ஆகியோரும் தங்களது மனசாட்சிப்படி வாக்களிப்பதாகத் தெரிவித்தனர்.
கலவரம்-வன்முறை-போர்க்களம்: திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு, பிரிவு வாரியாக எண்ணிக் கணிக்கும் முறையின்படி வாக்கெடுப்பை நடத்த பேரவைத் தலைவர் பி.தனபால் முடிவு செய்தார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவைத் தலைவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டனர். பேரவைத் தலைவரின் மேஜைக்கு முன்பாக அமர்ந்திருந்த சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீனை சூழ்ந்ததுடன், அவருக்குப் பின்புறமிருந்த புத்தகங்களை கிழித்து எறிந்தனர்.
பேரவைச் செயலாளரின் முன்புறமிருந்த சிறிய மேஜையையும், அவரது இருக்கையையும் திமுக உறுப்பினர்கள் தூக்கி வீசினர். கையில் இருந்த தாள்களை தூள் தூளாக்கி பேரவை முழுவதும் வீசியும், கனமான புத்தகங்களை ஆளும்கட்சி உறுப்பினர்களை குறிவைத்தும் எறிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com