பேரவையில் மேஜை, மைக்குகள் உடைப்பு

தமிழக அமைச்சரவை மீது சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக, திமுக எம்எல்ஏக்களின் ரகளையால் பேரவையிலிருந்த மேஜை, மைக்குகள் உடைக்கப்பட்டன.
கவிழ்க்கப்பட்ட பேரவைத் தலைவரின் மேஜை.
கவிழ்க்கப்பட்ட பேரவைத் தலைவரின் மேஜை.

தமிழக அமைச்சரவை மீது சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக, திமுக எம்எல்ஏக்களின் ரகளையால் பேரவையிலிருந்த மேஜை, மைக்குகள் உடைக்கப்பட்டன.
பேரவை சனிக்கிழமை தொடங்கியதும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு கோரினர். இதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதி மறுத்தார். இதைத் தொடர்ந்து திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர்.
பேரவைத் தலைவரின் இருக்கைக்கு முன்பு உள்ள மேஜை உடைக்கப்பட்டு தலைகீழாக கவிழ்க்கப்பட்டது. மேஜையில் இருந்த மைக்குகள் உடைக்கப்பட்டன. திமுக உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் (அணைக்கட்டு) பேரவைத் தலைவரின் மேஜையில் இருந்த மணியை கையில் எடுத்து வைத்துக் கொண்டார்.
இந்த சம்பவங்களை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த பேரவைத் தலைவர் தனபால், இதெல்லாம் நியாயமா? முறையானது தானா? என்று கேள்வி எழுப்பினார்.
ஒருகட்டத்தில் பேரவைத் தலைவரின் இருக்கை மீது ஏற சில எம்.எல்.ஏ.க்கள் முயன்றனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நண்பகல் 12.01 மணிக்குத் தொடங்கிய இந்த வன்முறை நிகழ்வுகள், 12.11 மணி வரை நடந்தது.
பேரவைத் தலைவர் சட்டை கிழிப்பு: இந்த வன்முறைச் சம்பவங்களைப் பார்த்த பேரவைத் தலைவர் பி.தனபால், அவையை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைத்தார். அத்துடன், அவையில் இருந்து அவர் வெளியேற முற்பட்டார். அப்போது, அவரைச் சூழ்ந்து கொண்ட திமுக உறுப்பினர்கள் அவரை வெளியேற விடாமல் சுற்றி வளைத்தனர்.
ஒருகட்டத்தில் அவரைத் தாக்கவும் முயற்சித்தனர். இதனால், பேரவையை பிற்பகல் ஒரு மணி வரை ஒத்திவைத்து பேரவையில் இருந்து வெளியேற முயன்றார், அவைத் தலைவர் தனபால். அப்போது, அவரை வெளியேற விடாமல் திமுக உறுப்பினர்கள் ரங்கநாதன், கு.க.செல்வம், கார்த்திகேயன், ஆஸ்டின் ஆகியோர் தடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, அவைக் காவலர்கள் பேரவைத் தலைவரை பத்திரமாக மீட்டனர்.
அவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அட்டூழியம்:
பேரவைத் தலைவர் வெளியேறியதும், திமுக எம்.எல்.ஏ.,க்கள் ப.ரங்கநாதன், கு.க.செல்வம் பேரவைத் தலைவரின் இருக்கையில் அமர்ந்தனர்.
மீண்டும் கூடிய போதும் வன்முறை:
பேரவை மீண்டும் பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. தான் ஒருபோதும் அவை விதிகளுக்கு எதிராகச் செயல்பட மாட்டேன் எனவும், அவையை நடத்த ஒத்துழைப்பு தரும்படியும் திமுக உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார் அவைத் தலைவர் தனபால்.
ஆனாலும், திமுக, காங்கிரஸ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் அல்லது அவையை ஒத்திவைத்து வேறொரு நாளில் அவையை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த இரண்டு கோரிக்கையில் ஏதேனும் ஒன்றை ஏற்க வேண்டுமென வற்புறுத்தினர். ஆனால், இதனை ஏற்க பேரவைத் தலைவர் பி.தனபால் அனுமதி மறுத்தார். இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பேரவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.
திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவு: அப்போது பேசிய பேரவைத் தலைவர், ஒரு விஷயத்துக்காக அவையை அடிக்கடி ஒத்திவைத்துக் கொண்டே இருப்பது சரியல்ல. இனிமேல் அவையை ஒத்திவைப்பது இல்லை. திமுக உறுப்பினர்கள் அவரவர் இருக்கைகளுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால், அவர்கள் யாரும் இருக்கைகளுக்குச் செல்லாமல் பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அவைக் காவலர்கள் உள்ளே வந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. அப்போது, திமுக உறுப்பினர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ், மோகன், தா.மோ.அன்பரசன், உதயசூரியன், மனோதங்கராஜ், பி.ஜி.ராஜேந்திரன், அன்பகம் கலை உள்ளிட்டோர் முன்வரிசையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மேஜை மீது ஏறி நின்று கூச்சல் எழுப்பினர். இவர்களோடு, எ.வ.வேலு, கே.என்.நேரு போன்ற முன்னாள் அமைச்சர்களும் சேர்ந்து கொண்டனர்.
இதற்கெல்லாம் மேலாக, முன்வரிசையில் உள்ள மூத்த அமைச்சர்களின் மேஜையின் மீது திமுக உறுப்பினர்கள் ரவிச்சந்திரன் (எழும்பூர்), கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), கருணாநிதி (பல்லாவரம்) ஆகியோர் ஏறினர். வெளியேற்ற வந்த அவைக் காவலர்களை கையைக் காட்டி மிரட்டல் விடுத்தனர்.
தண்ணீர் பாட்டில் வீச்சு: எதிர்க்கட்சி வரிசையில் தனது இருக்கையில் நின்று கொண்டிருந்த திமுக பெண் உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, திடீரென பாட்டிலில் உள்ள தண்ணீரை வீசினார். இதனால், அவைக் காவலர்கள், சட்டப் பேரவைச் செயலக அலுவலர்கள் மீது தண்ணீர் கொட்டியது. இதையடுத்து அவையை பிற்பகல் 3 மணி வரை தனபால் ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்படவே பிற்பகல் 3 மணிக்கு மேல் நம்பிக்கைத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com