முக.ஸ்டாலின் மீது தாக்குதல்: கரூரில் 15 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு

சட்டப்பேரவையில் திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் மீதான தாக்குதலைக் கண்டித்து,கரூரில் சனிக்கிழமை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையிலான திமுகவினர் 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

சட்டப்பேரவையில் திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் மீதான தாக்குதலைக் கண்டித்து,கரூரில் சனிக்கிழமை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையிலான திமுகவினர் 72 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 15-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
கரூரில், திமுக மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் ஏராளமானோர், திடீரென கரூர் மனோகரா கார்னர் அருகே மாலை 4 மணியளவில் திரண்டு கண்டனக் குரல் எழுப்பினர். தொடர்ந்து, அதே இடத்தில் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த மினி பேருந்துகள், அங்கு நின்றிருந்த வெளியூர் அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை கலவரக்காரர்கள் சிலர் உருட்டுக்கட்டை கொண்டு உடைத்தனர். இதனால், பேருந்து பயணிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.இராஜசேகரன்,நகர துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா, காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் மற்றும் அதிரடிப்படை போலீஸார் ஏராளமானோர் அங்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுகவினர் 72 பேரைப் போலீஸார் கைது செய்தனர். பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை விரட்டினர். இதனால்,அப்பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
மாலை 5.45 மணியளவில் சகஜ நிலைக்குத் திரும்பியதும் மீண்டும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. எனினும், போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com