மெரீனாவில் திமுகவினர் உண்ணாவிரதம்: மு.க. ஸ்டாலின் கைதாகி விடுதலை

சென்னை மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை மெரீனாவில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
சென்னை மெரீனாவில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.

சென்னை மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் தாக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் புகார் மனு அளித்தார். பின்னர் ஸ்டாலின், தனது கட்சியினருடன் மெரீனா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன் அமர்ந்து மாலை 4 மணிக்கு திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, சுரேஷ்ராஜன், ஆர்.எஸ்.பாரதி, மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டனர்.
இதையடுத்து, சிறிது நேரத்தில் காமராஜர் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, வாகனங்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன.
சம்பவ இடத்துக்கு பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் கே.சங்கர், துணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்து, போராட்டம் நடத்த தடை இருப்பதால் கலைந்து செல்லுமாறு கூறினர்.
இதற்கு மறுத்த திமுகவினரை போலீஸார் கைது செய்து, வேன்களில் ஏற்றினர். அதேநேரத்தில் சாலை முழுவதும் வாகனங்களால் ஸ்தம்பித்து நின்றதால், வேன்களில் திமுகவினரை ஏற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் திமுகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, காவல் துறை வாகனங்களில் திமுகவினர் ஏறி, கூச்சலிட்டதால் பதற்றமும் ஏற்பட்டது.
ஒன்றரை மணி நேரத்தில் நிலைமையைச் சமாளித்து மயிலாப்பூரில் உள்ள 4 திருமண மண்டபங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினரை அடைத்தனர்.
இதையடுத்து, அவர்கள் மாலை 6.30 மணிக்கு விடுவிக்கப்பட்டன. இருப்பினும், போராட்டத்தால் போக்குவரத்து சீரடைய பல மணி நேரமானது.
இதையடுத்து, ஸ்டாலின் கூறும்போது, "சட்டப் பேரவையில் காவலர்களால் திமுக எம்எல்ஏக்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதிவழியில் தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com