ஸ்டாலின் காரில் சோதனை குறித்து விசாரணை: சட்டப் பேரவைத் தலைவர் உறுதி

மு.க.ஸ்டாலின் வந்த கார் சோதனை செய்யப்பட்டது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் கூறினார்.
ஸ்டாலின் காரில் சோதனை குறித்து விசாரணை: சட்டப் பேரவைத் தலைவர் உறுதி

மு.க.ஸ்டாலின் வந்த கார் சோதனை செய்யப்பட்டது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் கூறினார்.
சட்டப் பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்குக் கூடியதும், அதிமுக எம்எல்ஏ எஸ்.செம்மலை, தாம் உரிமை மீறல் பிரச்னை குறித்து கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், அவரைத் தொடர்ந்து பேச தனபால் அனுமதி மறுத்தார். இதற்கு, திமுக எம்எல்ஏக்கள், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, நடைபெற்ற விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: "இது சட்டப் பேரவையா? பெங்களூரு சிறையா? கைதியை அழைத்து வருவது மாதிரி அழைத்து வருகிறீர்கள். பேரவை வளாகம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.(அப்போது, செம்மலை, திமுக எம்எல்ஏக்கள் ஜெ.அன்பழகன், ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் பேச வாய்ப்புக் கேட்டதால், பேரவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.)
பி.தனபால்: முதல்வர் கொண்டு வந்துள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவது அவையின் முக்கிய நடவடிக்கையாகும். எனவே, அதிலிருந்து விலகிச் செல்வது போன்று நடக்க வேண்டாம்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன்: யார் வாய்ப்புக் கேட்டாலும் பேச வாய்ப்பு கொடுங்கள். எங்கள் உரிமையைக் காப்பாற்ற வேண்டியவரே நீங்கள்தான். நீங்கள் இப்படி இருந்தால் எப்படி? உங்களை நம்பித்தானே வந்துள்ளோம்.
தனபால்: இன்று நிறைய அலுவல்கள் இருக்கின்றன. ஆனாலும், பேசப்படும் விஷயங்களின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன்.
துரைமுருகன்: கைதிகளை நடத்துவது போன்று திமுக எம்எல்ஏக்களை நடத்தக் கூடாது. பேரவைக்கு ஸ்டாலின், நான் (துரைமுருகன்), எ.வ.வேலு உள்ளிட்டோர் வந்த காரை சோதனை நடத்துவதாக காவல் துறை உயரதிகாரி தெரிவித்தார்.
"சோதனை நடத்திக் கொள்ளுங்கள்' எனக் கூறி, வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு போர் நினைவுச் சின்னத்தில் இருந்து பேரவை வரும் வரை நடந்தே வந்தோம். எனவே, எம்எல்ஏக்களை அவமானப்படுத்திய காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனபால்: இதுகுறித்து முழுவதும் விசாரிக்க வேண்டும். காவல் அதிகாரி மீதான புகார் உண்மையாக நடந்திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com