7 தமிழர் விடுதலைக்காக அனைத்துத் தரப்பினரும் அழுத்தம் தர வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்காக அனைத்துத் தரப்பினரும் அழுத்தம் தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 தமிழர் விடுதலைக்காக அனைத்துத் தரப்பினரும் அழுத்தம் தர வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்காக அனைத்துத் தரப்பினரும் அழுத்தம் தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
இராஜிவ் கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், அவர்களை விடுதலை செய்யும் விஷயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தமிழர் விடுதலைக்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையே இது காட்டுகிறது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவர் தாமதம் செய்ததைக் காரணம் காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை வாழ்நாள் சிறை தண்டனையாக மாற்றி கடந்த 18.02.2014 அன்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதுமட்டுமின்றி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432&ஆவது பிரிவின்படி, அவர்களை விடுதலை செய்வது குறித்து அரசு முடிவு செய்யலாம் என்றும் அப்போதைய தலைமை நீதிபதி பி.சாதாசிவம் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்திருந்தது. இதைப் பயன்படுத்தி 7 தமிழர்களும் விடுதலை செய்யப் படவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வது குறித்த அறிவிப்பை 19.02.2014 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா வெளியிட்டார். இதுகுறித்த தமிழக அரசின் முடிவு மத்திய அரசின் கருத்துக்காக அனுப்பி வைக்கப்படுவதாகவும், அதற்கு மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவர் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

தமிழக அரசின் இம்முடிவை  எதிர்த்து அடுத்த நாளே அப்போதைய மன்மோகன்சிங் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை இறுதி விசாரணைக்கு வரவில்லை. மாறாக, இதுபோன்ற சூழலில் தண்டனையை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கா, மாநில அரசுக்கா? என்பது குறித்து மட்டும் விசாரித்த  அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து, இப்ராஹிம் கலிஃபுல்லா, பி.சி.கோஷ், யு.யு. லலித், சாப்ரே ஆகியோர் அடங்கிய  அரசியலமைப்பு சட்ட அமர்வு 03.12.2015 அன்று அளித்த தீர்ப்பில்,  மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்று ஆணையிட்டது. அதேநேரத்தில், 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கில் கருத்துக் கூற விரும்பவில்லை என்றும், அதுகுறித்து நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் தீர்மானிப்பர் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டது.

ஆனால், அவ்வழக்கின் விசாரணை  இன்னும் தொடங்கவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி விசாரணை தொடங்கும் என நீதிபதிகள் கூறியிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் தொடங்கவில்லை. அதன்பிறகும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த வழக்கு தான். இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரும் 26&ஆவது ஆண்டாக தண்டனையை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, நோய்வாய்ப்பட்டிருக்கும் தந்தையின் கடைசி காலத்தில் உடனிருக்க வேண்டும் என்ற மகனின் அடிப்படைக் கடமையைக் கூட நிறைவேற்ற முடியாத மன உளைச்சலில் வாடிக் கொண்டிருக்கிறார்.

நளினியும், முருகனும் சிறையில் பெற்றெடுத்த மகளின் திருமணத்திற்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ரவிச்சந்திரன் மிக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மீதமுள்ள சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருப்பதாலும், தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது தெரியாததாலும் கொஞ்சம், கொஞ்சமாக மனச்சிதைவுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதைவிட இன்னும் கொடுமையான தண்டனையாக இவர்கள் எதை அனுபவிக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்பது தெரியவில்லை. தண்டிக்கப்பட்ட அனைவரும் தங்கள் வாழ்வின் முக்கியமான காலகட்டத்தை சிறையில் இழந்து விட்டனர். மீதமுள்ள காலத்தையாவது அவர்கள் நிம்மதியாக கழிக்க அனுமதிப்பது தான் இயற்கை நீதியாகும். அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை  இனியும் தொடர வேண்டும் என்று கருதினால் அவர்கள் ஆட்சியாளர்களாக இருக்க வாய்ப்பில்லை; மாறாக பழிதீர்க்கும் வெறி கொண்டவர்களாகத் தான் இருக்க வேண்டும். எழுவர் விடுதலை குறித்த வழக்கை தொடர்ந்து நடத்துவதை விட அவர்களை விடுதலை செய்யலாம் என மத்திய ஆட்சியாளர்கள் அறிவிப்பது தான் தமிழர்களை மனம் குளிரச் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க முடிவாக அமையும். 

ஒருவேளை மத்திய அரசு அவ்வாறு செய்ய மறுத்தால் நீண்டகாலமாக வலியுறுத்தி வருவதைப் போல அரசியலமைப்புச் சட்டத்தின் 161&ஆவது பிரிவை பயன்படுத்தி தமிழக அரசே விடுதலை செய்யலாம். இந்த கோரிக்கையை நிறைவேற்றும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அழுத்தம் தர வேண்டும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை மிகவும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதால், அவர்கள் அதற்கு முன் வர வேண்டும்; அதற்காக மாநிலத் தலைமை குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com