ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை முறைப்படி தெரிவித்தார்

ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதை முறைப்படி ஆளுநரிடம் அவர் தெரிவித்தார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
ஆளுநர் வித்யாசாகர் ராவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதை முறைப்படி ஆளுநரிடம் அவர் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப் பேரவையில் சனிக்கிழமை தனது அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்தை தாக்கல் செய்தபோது சட்டப்பேரவையில் பெரும் ரகளை ஏற்பட்டது. இதனால், இரு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர். இல்லையெனில், ஒரு வாரத்துக்குப் பின்னர் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் இதை பேரவைத் தலைவர் பி.தனபால் நிராகரித்து விட்டார். அதற்கு பதில் எம்எல்ஏக்களை எழுந்து நிற்க செய்து எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பை நடத்தினார்.
இதில், தீர்மானத்துக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்களும், எதிராக 11 எம்எல்ஏக்களும் எழுந்து நின்றனர். இதையடுத்து, எடப்பாடி கே.பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்து விட்டதாக பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது, தனது தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது குறித்து ஆளுநரிடம் பழனிசாமி முறைப்படி தெரிவித்தார். அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது.
அவருடன் அதிமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கேட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், செல்லூர் கே.ராஜு உள்ளிட்டோரும் இருந்தனர்.
ஆளுநருக்கு அறிக்கை: பேரவையில் அரசின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை சட்டப் பேரவைச் செயலர் ஜமாலுதீன் முறைபடி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com