ஆளுநருடன் பன்னீர்செல்வம் சந்திப்பு: வாக்கெடுப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் இன்றி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை ஏற்கக் கூடாது என ஆளுநரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தினர்.
ஆளுநருடன் பன்னீர்செல்வம் சந்திப்பு: வாக்கெடுப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் இன்றி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை ஏற்கக் கூடாது என ஆளுநரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தினர்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சிறப்பு சட்டப் பேரவை கூட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்து திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். நாற்காலிகள் வீச்சு, பேப்பர் கிழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, திமுக எம்எல்ஏக்களை சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் இல்லாமலே வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யா சாகர் ராவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து புகார் கூறினார். அப்போது, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மாஃபா க.பாண்டியராஜன், எஸ்.செம்மலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதன் பின்னர், கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில், எம்எல்ஏ மாஃபா க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆளுநரைச் சந்தித்தோம். அப்போது, சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளை ஆளுநரிடம் எடுத்துரைத்தோம்.
ஒவ்வொரு எம்எல்ஏவும் 5 நாள்கள் தங்களது தொகுதிக்குச் சென்று வந்த பின்னர், ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் எடுத்துரைத்தோம்.
எந்தவித அரசியல் சட்டத்துக்கும் உட்படாமல், பலவந்தமாக எம்எல்ஏக்களை வெளியேற்றிவிட்டு பேரவையில் நடந்த ஜனநாயக படுகொலை குறித்தும் தெளிவாகக் கூறினோம். எதிர்க்கட்சிகள் இன்றி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு அரசியல் சட்டத்துக்கு எந்த விதத்திலும் உட்படாதது, அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது. எனவே சனிக்கிழமை நடந்த வாக்கெடுப்பை ரத்து செய்து, சட்டப்பேரவையில் மறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அவரிடம் ஒரு சில ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம். ஜனநாயகக் படுகொலையை தடுக்கும் விதமாக, ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com