தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு 

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு 

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மிக மோசமான முறையில் சீர்குலைந்து வருகின்றது.

கடந்த சில மாதங்களில் தமிழக காவல்துறையின் பணிகள் பெருமளவு அரசியல் தலைவர்களை, அமைச்சர் பெருமக்களை, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்கவும் அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மட்டும் தான் அதிக நேரங்களை செலவிட்டு வரும் நிலை உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டப்பூர்வ ஜனநாயக கடமையை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு சென்றால் அவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் இருக்கவும், வன்முறையில் இருந்து பாதுகாக்கவும் ஆயிரக்கணக்கான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டிய நிலை உள்ளதை கண்டு வெட்கப்படுவதைத் தவிர வேறுவழியில்லை.

பலத்த பாதுகாப்பு கொடுத்தும் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவைத் தலைவருக்கு பாதுகாப்பு இல்லை. அவரது மேஜை உடைக்கப்பட்டது, அவரது சட்டையும் கிழிக்கப்பட்டது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சட்டையும் கிழிக்கப்பட்டது.

பேரவைக் கூட்டம் முடிந்து உறுப்பினர்கள் ஊருக்கு சென்றால் அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு வேண்டும் என்று கோருகின்றனர். கடந்த இருபது தினங்களாக கூவத்தூர், ராயப்பேட்டை, கீரின்வேஸ்சாலை என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீசார் இனி சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும், அலுவலகத்திற்கும் பாதுகாப்பு கொடுக்க செல்ல வேண்டிய அவலமான நிலை உள்ளது.

ஆட்சி யாருக்கு அதிகாரம் யாருக்கு என இவர்கள் மோதிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து கொலைகள், பாலியல் வன்முறை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருகின்றது.

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது நந்தினி சீரழிக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டாள்.

போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த 7 வயது ஹாசினியை காட்டுமிராண்டி ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெறித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த கொடுமையும் நடந்துள்ளது.

சென்னை எர்ணாவூரில் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பழனி ராணி தம்பதியரின் 3 வயது பெண் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டு குப்பைமேட்டில் வீசப்பட்டுள்ளாள். சகிக்க முடியாத அளவிற்கு குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கும், கொலைக்கும் பலியாக்கப் படுகிறார்கள்.

ஓசூரில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி கொலை, திருவண்ணாமலையில் கோவில் வாசல் முன் கொலை, வேலூரில் கொலை, அப்பா - மகன் கொலை என ஒவ்வொரு நாளும் கொலை, கொலை என பதற்ற சூழல் உருவாகி வருகிறது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com