50 ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் தூர்வாரப்பட்டுள்ள ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு.
50 ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் தூர்வாரப்பட்டுள்ள ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு.

வறட்சியால் வறண்டு கிடக்கும் நீர்நிலைகள் தூர்வாரப்படுமா?

ஈரோடு: வறட்சியால் வறண்டு கிடக்கும் நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு: வறட்சியால் வறண்டு கிடக்கும் நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி தொகுதி ஆகியவற்றுக்குப் பிரதான நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, அதைச் சார்ந்த 37 கசிவுநீர்க் குட்டைகள், கீழ்பவானி கால்வாய், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனக் கால்வாய், காலிங்கராயன் கால்வாய், மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள், குட்டைகள் உள்ளிட்டவற்றை உடனடியாகத் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானிசாகர் மூலமாக கீழ்பவானி, கொடிவேரி, காலிங்கராயன் ஆகிய பாசனத்தின்கீழ் ஆண்டுதோறும் 2.40 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் உதவி பெறுகின்றன. இதுதவிர 37 கசிவுநீர்க் குட்டைகள் மூலமாகவும், நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் துணையுடன் கூடுதலாக 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகின்றன.
ஆயிரக்கணக்கான கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கட்டுமானப் பணி 1954-ஆம் ஆண்டு தொடங்கி 1955-ஆம் ஆண்டின் இறுதியில் முடிக்கப்பட்டது. 6 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
120 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணையில் 105 அடிக்குத் தண்ணீர் தேக்கி வைக்க முடியும். மொத்தம் 33 டிஎம்சி. நீர்இருப்பு வைக்க இயலும். ஆசியாவின் மிகப் பெரிய மண் அணைகளில் இரண்டாவது இடத்தைப் பெறும் பவானிசாகர் அணை கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து இதுவரை ஒருமுறை கூட தூர்வாரப்படவில்லை.
ஒவ்வோர் ஆண்டும் கோடைக் காலத்துக்கு முன்பு நீர்இருப்பு மிகவும் குறைந்துள்ள நேரத்தில் பவானிசாகர் அணையைத் தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கை. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட குளங்கள், குட்டைகளை ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு அமைப்பு தொடர்ந்து தூர்வாரி வருகிறது.
அதேபோல, 52 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருந்த சூரம்பட்டி அணைக்கட்டை ஈரோடை அமைப்பு ரூ. 20 லட்சத்தில் தூர்வாரியுள்ளது. இதேபோல தனியார் அமைப்புகள் உதவியுடன் மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் செ.நல்லசாமி கூறியதாவது:
70 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஈரோடு மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லை. 50 ஆண்டுளுக்கும் மேலாகப் பசுமையாக இருந்த தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. தென்மேற்குப் பருவமழை பெய்வதற்கு ஜூன் மாதம் ஆகிவிடும். எனவே, இப்போதைய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. ஈரோடு மாநகராட்சி, சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைத் தனியார் அமைப்புகள் தூர்வாரி சுத்தம் செய்து வருகின்றன. அதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைத் தூர்வார போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள், அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள், விவசாய சங்கங்கள், சமூக சேவை அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தூர்வாரும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றார்.
கீழ்பவானி வடிநிலக் கோட்ட பொதுப் பணித் துறை உயர் அதிகாரி கூறியதாவது:
பவானிசாகர் அணை கட்டியது முதல் இதுவரை ஒருமுறைகூட தூர்வாரப்படவில்லை. இதனால் அணையின் நீர்பிடிப்பு கொள்ளளவில் 10 சதவீதம் வரை வண்டல் மண்ணும், மணலும் தேங்கிக் கிடக்கிறது. அவற்றை அப்புறப்படுத்த அரசின் அனுமதி தேவை. இருப்பினும், அணையின் கரைப் பகுதியிலும், நீர்தேக்கப் பகுதியிலும் இருந்து 1.74 கோடி கன மீட்டர் அளவுக்கு மண்ணை எடுத்து விற்பனை செய்ய அரசு தரப்பில் முடிவு செய்து அதற்கான அனுமதி வழங்க கோரப்பட்டுள்ளது.
பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியையொட்டி விளாமுண்டி வனப் பகுதி உள்ளதால் தூர்வாருவதற்கு முன் வனத் துறையிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதிக்குப் பிறகே தூர்வாருவதற்கான அனுமதி கிடைக்கும். இதுதொடர்பாக நீர்த்தேக்கத்தின் முதல் பகுதியில் தூர்வார திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், தடையில்லாச் சான்று கிடைத்ததும் டெண்டர் விட்டு மண் அள்ளும் பணி நடைபெற வாய்ப்புள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளான ஏரி, குளங்கள், கசிவுநீர்க் குட்டைகள் தொடர்ந்து ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாநகரைச் சுற்றியுள்ள இரட்டைப்பாளிவலசு குளம், செம்மாம்பாளையம் குட்டை, மூலக்கரை, கூரப்பாளையம், ரங்கன்பள்ளம், சிந்தன்குட்டைகள் தூர் வாரப்பட்டுள்ளது. அன்னை சத்யா நகர், வரட்டுப்பாளையம் குளங்கள் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இதுபோக கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை, சஞ்சீவிராயன்குளம், அனந்தசாகம்குளம், கொளப்பலூர் பகுதியிலுள்ள குளங்கள், சத்தி, பவானிசாகர் சுற்றுப் பகுதியில் 17 குளங்கள், தாளவாடியில் 11 குளங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 40 குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com