வறண்டது வீராணம்: கோடைக்கு முன்பே சென்னைக்கு சோதனை ஆரம்பம்

சென்னையின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரி வறண்டுவிட்டதால், கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
வறண்டது வீராணம்: கோடைக்கு முன்பே சென்னைக்கு சோதனை ஆரம்பம்


சென்னை: சென்னையின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரி வறண்டுவிட்டதால், கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11 டி.எம்.சி. ஆகும். இந்த ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 1.6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு ஏரியான வீராணம் ஏரி வறண்டுவிட்டது.

இந்த நிலையில், கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 21-ஆம் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது கண்டலேறு அணையில் இருந்து 1800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர், பூண்டி ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 491 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி ஏரியின் நீரின் அளவு 24.94 அடியாக உள்ளது. தற்போது 837 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

ஜனவரி 21-ஆம் தேதி முதல் தற்போது வரையிலான கால கட்டத்தில் பூண்டி ஏரிக்கு 1.91 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரானது கீழணை, வடவாறு வழியாகக் கொண்டுவரப்பட்டு இந்த ஏரியில் தேக்கப்பட்டு, பாசனம் மற்றும் சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடி ஆகும். உயரம் 47.50 அடி.

இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நிகழாண்டு கர்நாடக அரசு காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறக்காததாலும், பருவ மழை பொய்த்ததாலும், மேட்டூரிலிருந்து உரிய அளவில் நீர் திறக்கப்படவில்லை. குறைந்த அளவே பெய்த மழைநீர், காவிரியிலிருந்து வந்த குறைந்தளவு நீர் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கீழணைக்கு சுமார் 10 தினங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

சென்னை நகரின் கோடைக்கால குடிநீர்த் தேவையைக் கருதி, கீழணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படாமல், வீராணம் ஏரிக்கு நீர் கொண்டு வரப்பட்டு தேக்கி வைக்கப்பட்டது.

குறைந்தளவு மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு, சென்னைக்கு வழங்கப்பட்டு வந்தது. ஏரியிலிருந்தும் பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை.

மழை இல்லாததால், ஏரியின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வந்தது. சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக ஏரியிலிருந்து தினமும் விநாடிக்கு 77 கன அடி நீர் அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில், நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வந்ததால் கடந்த சில நாள்களாக சென்னைக்கு விநாடிக்கு 14 கன அடி நீர் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஏரியின் நீர்மட்டம் 9 மில்லியன் கன அடியாக இருந்தது. இந்த நிலையில், வார இறுதி நாட்களில் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியாத அளவுக்கு வீராணம் ஏரி வறண்டது.

வீராணம் வறண்டுவிட்டதால், என்எல்சி சுரங்க நீர் மற்றும் போர் மூலம் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்திலேயே ஏரிகள் வறண்டுவிட்டதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கோடைக் காலத்தில் மிக மோசமான குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com