அம்மா திட்டங்களின் பெயர்களை அரசுத் திட்டங்கள் என்று மாற்றுக! ராமதாஸ்

அம்மா திட்டங்களின் பெயர்களை அரசுத் திட்டங்கள் என்று மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அம்மா திட்டங்களின் பெயர்களை அரசுத் திட்டங்கள் என்று மாற்றுக! ராமதாஸ்

அம்மா திட்டங்களின் பெயர்களை அரசுத் திட்டங்கள் என்று மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, நேற்று முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு 5 புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல்வர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகள் இந்திய அரசியலலமைப்புச் சட்டத்தையும், மாண்புகளையும் அவமதிக்கும் செயலாகும்.

முதலமைச்சர் அலுவலகத்தில், வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டவரான மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்களைத் தூவி மரியாதை செய்திருக்கிறார். தொடர்ந்து புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட பழனிச்சாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தமது அரசு செயல்படும், ஜெயலலிதா காட்டும் வளர்ச்சிப் பாதையில் செயல்படும் என்று இரு முறை அழுத்தம் கொடுத்து கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர ஊர்தி வாங்க மானியம் வழங்கும் திட்டத்திற்கு, அம்மாவின் நினைவாக ‘அம்மா இருசக்கர வாகனம் திட்டம்’ எனப் பெயரிடப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 8 கோடி மக்களை ஆட்சி செய்யும் அரசு அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். அவ்வாறு செயல்படுவதற்கு பதிலாக, மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்துக்களைக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரை முன்னிறுத்தி, அவரது பாதையில் அரசு செயல்படும் என்று அறிவிப்பதோ, அரசுத் திட்டங்களுக்கு குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டுவதோ ஏற்றுக்கொள்ள முடியாததாகும். தமிழக முதலமைச்சருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் ஜெயலலிதா எவ்வளவு பெரிய தியாகியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்காக அவர்கள் தங்கள் கட்சி நிகழ்வுகளில் ஜெயலலிதாவுக்கு எத்தகைய  மரியாதை வேண்டுமானாலும் செலுத்தலாம்; ஜெயலலிதாவின் நினைவாக தங்களை வருத்திக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களின் உரிமை. அது பற்றி எவரும் கேள்வி எழுப்ப முடியாது.

ஆனால், முதலமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஊழல் குற்றவாளியின் படத்தை வைப்பதும், அதற்கு மலர் தூவி மரியாதை செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, ஆட்சி அதிகாரத்தை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் இழைக்கப்படும் அவமானம் ஆகும். முதலமைச்சராகவும், அமைச்சராகவும் பதவியேற்பவர்கள் அனைவரும் ‘‘சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன். இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன்’’ என்று தான் உறுதியேற்கிறார்கள். அதன்படி ஆட்சியாளர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலில் தான் ஆட்சி செய்ய வேண்டும். அதை விடுத்து ஜெயலலிதா காட்டும் பாதையில் செயல்படப் போவதாக கூறுவது ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது அல்லவா? அனைத்து ஜனநாயக அமைப்புகளும் மதிக்கப்பட வேண்டிய அரசியலமைப்புச் சட்டம் என்ற புனித ஆவணத்தின் இடத்தில் ஓர் ஊழல் குற்றவாளியை வைத்துப்பார்ப்பதை எப்படி அனுமதிக்க முடியும்?

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அரசியலமைப்பு சட்டம் தொடங்கி ஜனநாயக நெறிமுறைகள் வரை அனைத்தும் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. எங்கும் அம்மா... எதிலும் அம்மா என்பது தான் எழுதப்படாத சட்டமாக இருந்தது. எனினும், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா தப்புக் கணக்கின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக இதையெல்லாம்  தமிழகம் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், ஊழல் வழக்கில் மீண்டும் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பிறகும் ஜெயலலிதா தான் தமிழகத்தின் வழிகாட்டி என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஒருபுறம் இக்குற்றத்தை இழைக்கும் ஆட்சியாளர்கள், இன்னொருபுறம் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா கட்டளைக்கு பணிந்து செயல்படுகின்றனர். இத்தகைய சட்ட மீறல்கள் தொடர்வதை இனியும் அனுமதிக்கக்கூடாது.

எனவே, ஊழல் குற்றவாளியின் பெயரில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா சிமெண்டு,  அம்மா முகாம் திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா சிறு வணிக கடன் திட்டம், அம்மா திரையரங்குகள், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்,அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா திட்டம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா பூங்காக்கள், அம்மா உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்டத்  திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு அரசின் பெயரில் செயல்படுத்தப்பட வேண்டும். கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட வேண்டும். திரையரங்குகளில் ஜெயலலிதா இறுதி ஊர்வலம் குறித்த செய்தித் தொகுப்பு ஒளிபரப்பப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக தமிழக முதல்வரை ஆளுநர் அழைத்து, ஊழல் குற்றவாளியின் பெயரில் ஆட்சி நடத்துவதை விடுத்து, அரசியல் சட்டத்தின் பெயரால் ஆட்சி நடத்தும்படி அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்பட மறுத்தால் மீது அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com