எதிர்க்கட்சியினர் இல்லாமல் வாக்கெடுப்பு நடத்தியது தவறு

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது தவறு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
எதிர்க்கட்சியினர் இல்லாமல் வாக்கெடுப்பு நடத்தியது தவறு

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது தவறு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது நடைபெற்ற தாக்குதல் கண்டனத்துக்குரியது. அவரைத் தாக்கியவர்களை உடனடியாக பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும்.
அதைபோல, பேரவைத் தலைவரின் இருக்கையில் திமுகவினர் உணர்ச்சிவசப்பட்டு அமர்ந்ததையும் தவிர்த்திருக்க வேண்டும்.
வாக்கெடுப்பை வேறு நாளில் நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்தவும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இது சரியான நடைமுறை இல்லை.
இதுகுறித்து, திமுக எம்எல்ஏக்கள் ஆளுநரைச் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர். குடியரசுத் தலைவரைச் சந்திக்கவும் உள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களின் நிலைப்பாட்டை முடிவு செய்வதில் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், நான் (திருநாவுக்கரசர்) ஆதரிக்கச் சொன்னதாகவும் சிலர் தலையிட்டு அதை முறியடித்து விட்டதாகவும் சொல்கின்றனர். இது திட்டமிட்டுச் சொல்லப்படும் பொய்யான தகவலாகும்.
திமுக எடுக்கும் நிலைப்பாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும்படி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் சொல்லி விட்டதாகவும், நான் காலதாமதம் செய்ததாகவும் பரப்பப்பட்ட தகவல்கள் மிகுந்த கண்டனத்துக்குரியது.
கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த வெளியிடப்படும் இந்தத் தகவல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ராகுலிடம் பேசாமலும், மேலிடத் தலைவர்களுடன் பேசாமலும் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்றார்.
பேட்டியின்போது எம்எல்ஏ எச்.வசந்தகுமார், மாநிலப் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com