ஐ.எஸ். இயக்கத்துக்கு நிதி அளித்த சென்னை இளைஞர் கைது: மேலும் 4 பேர் சிக்குகின்றனர்: சிரியா செல்ல திட்டமிட்டது அம்பலம்

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி அளித்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த மேலும் 4 பேர் சிக்குகின்றனர்.
தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்ட முகம்மது இக்பால்.
தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்ட முகம்மது இக்பால்.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி அளித்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த மேலும் 4 பேர் சிக்குகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜமீல் முகமது என்ற இளைஞரை, அந்த மாநிலத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்தாண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை மயிலாப்பூர் பஜார் தெருவைச் சேர்ந்த முகம்மது இக்பால் (28) என்பவருக்கும், ஜமீல் முகமதுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும், இக்பால் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஜமீல் முகமது மூலம் ரூ.65 ஆயிரம் நிதி வழங்கியிருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், தமிழக போலீஸார் உதவியுடன் தலைமறைவாக இருந்த இக்பாலை தேடி வந்தனர். இந்நிலையில் தங்க கடத்தலில் ஈடுபட்ட இக்பாலை கடந்த 6-ஆம் தேதி மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இக்பாலிடம், ராஜஸ்தான் போலீஸார் முதல் கட்ட விசாரணையை உடனடியாக செய்தனர். பின்னர் அங்குள்ள நீதிமன்றத்தில் கைது உத்தரவு பெற்ற அந்த மாநில போலீஸார், சில நாள்களுக்கு முன்பு இங்கிருந்து இக்பாலை கைது செய்து ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட அவரிடம் தமிழக போலீஸாரும், ராஜஸ்தான் மாநில போலீஸாரும் இணைந்து நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்: இக்பால் வெளிநாட்டில் பொருள்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். அவர் முகநூல் (ஃபேஸ்புக்) சுட்டுரை (டுவிட்டர்) போன்ற சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு கிடைத்திருக்கிறது. அந்தத் தொடர்பே நாளடைவில், அவரை ஐ.எஸ். இயக்க ஆதரவாளராக மாற்றியுள்ளது.
இதில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் அபு அல் சுடானி என்பவருடன் இக்பாலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்தான், இக்பாலிடம் ஐ.எஸ். இயக்கத்தின் வளர்ச்சிக்கு நிதி திரட்டித் தருமாறு கூறியுள்ளார். இதன் விளைவாகவே இக்பால், ரூ.65,000 நிதியை ஜமீல் முகமது மூலம் வழங்கியுள்ளார். இதேபோல சென்னையைச் சேர்ந்த 4 பிரமுகர்களிடம் இக்பால் நிதி பெற்று, ஜமீல் முகம்மது மூலம் ஐ.எஸ். இயக்கத்துக்கு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிரியா செல்ல திட்டம்: இதில் ஜமீல் முகம்மதுவுடன் இக்பாலுக்கு தொடர்பு இருப்பது தெரிந்த பின்னர், 3 மாதங்களாக போலீஸார் அவரை கண்காணித்து வந்தனர். மேலும் இக்பாலுக்கு ஐ.எஸ். இயக்கத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பினால், துருக்கி வழியாக சிரியா செல்வதற்கு திட்டமிட்டிருக்கிறார். அங்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் நடத்தி வரும் முகாம்களில் பயிற்சி பெறவும் முடிவு செய்திருக்கிறார்.
ஆனால் அவருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதினால், துருக்கிக்கு செல்ல முடியவில்லை. இத் தகவலை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இக்பால் சமூக ஊடகங்களில் தனது பெயரை டிராவல் ஹக் என்ற பெயரை பயன்படுத்தியுள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தும் போலீஸார் விசாரணையில் வெளிவந்துள்ளன.
4 பேர் சிக்குகின்றனர்: இந்த வழக்கில் இக்பால் மூலம் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி அளித்த 4 பேரை கைது செய்ய ராஜஸ்தான் போலீஸார், தமிழக போலீஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேடப்படும் 4 பேரும் ரூ.3 லட்சம் வரை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி அளித்திருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இவர்கள் 4 பேரையும் கைது செய்தால், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு மேலும் நிதி அளித்தவர்களின் விவரம் கிடைக்கும் என போலீஸார் கூறுகின்றனர். இதன் விளைவாக இவர்கள் 4 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையை போலீஸார் திங்கள்கிழமை (பிப்.20) முதல் துரிதப்படுத்தியுள்ளனர்.
இதுவரை 5 பேர் கைது
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு உதவி செய்ததாகவும், அந்த இயக்கத்தில் இருந்ததாகவும் தமிழகத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்த விவரம்: இராக், சிரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம், உலகம் முழுவதும் ஆள்களையும், நிதியையும் திரட்டி வருகிறது.
இந்த இயக்கம், இதற்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறது. தமிழகத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இருந்ததாகவும், உதவி செய்ததாகவும் சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த சுவாலிக் முகமது, திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுபஹானி, கோவையைச் சேர்ந்த அபு பஷீர் உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு பல்வேறு வகைகளில் ஆதரவு அளித்த 10-க்கும் மேற்பட்டவர்களை தமிழக காவல் துறை தொடர்ந்து கண்காணிப்பிலேயே வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com