திருக்குறள்தான் தமிழர்களின் அடையாளம்! கவிஞர் வைரமுத்து

திருக்குறள் தான் தமிழர்களின் அடையாளம் என்றார் கவிஞர் வைரமுத்து.
தினமணி, தமிழ் இசைச் சங்கம் சார்பில் நடைபெற்ற இலக்கிய முன்னோடிகளின் வரிசையில் 'வள்ளுவர் முதற்றே அறிவு' எனும் தலைப்பில் கட்டுரை ஆற்றிய கவிஞர் வைரமுத்துவுக்கு நினைவுப்பரிசு வழங்கினார் தினமணி ஆசிரியர்
தினமணி, தமிழ் இசைச் சங்கம் சார்பில் நடைபெற்ற இலக்கிய முன்னோடிகளின் வரிசையில் 'வள்ளுவர் முதற்றே அறிவு' எனும் தலைப்பில் கட்டுரை ஆற்றிய கவிஞர் வைரமுத்துவுக்கு நினைவுப்பரிசு வழங்கினார் தினமணி ஆசிரியர்

திருக்குறள் தான் தமிழர்களின் அடையாளம் என்றார் கவிஞர் வைரமுத்து.
தமிழ் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் திருவள்ளுவர் குறித்து கவிஞர் வைரமுத்து தினமணியில் எழுதியுள்ள "வள்ளுவர் முதற்றே அறிவு' கட்டுரை மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அரங்கேற்றம் செய்யப்பட்டது.
தினமணி மற்றும் தமிழ் இசைச் சங்கம் இணைந்து ராஜாமுத்தையா மன்றத்தில் நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து ஆற்றிய உரை: இங்கே நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் நாங்கள் எல்லாம் வள்ளுவரின் உயிர் சுமந்த பிரதிகள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். வள்ளுவர் கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும் வரை அவனது அங்கங்களில் வாழ்வார்.
உலக இனம் அழியும் வரை தமிழ் இனம் அழியாது. தமிழ் இனம் இருக்கும் வரை வள்ளுவர் மறைய மாட்டார்.
தமிழர்களாகப் பிறந்ததற்காக சில வழிகளில் சிறுமைகளை சந்தித்திருக்கலாம். ஆனால் அத்தனைச் சிறுமைகளையும் துடைக்கின்ற ஒரே பெருமை, நாம் வள்ளுவர் வழித்தோன்றல்கள் என்பது தான்.
காலம் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், எத்தனை மாற்றங்கள் வந்தாலும் ஈராயிரம் ஆண்டுகளாய் வள்ளுவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் தமிழ் வாழ்கிறது என்று அர்த்தம். அறிவு வாழ்கிறது என்று அர்த்தம்.
தமிழர்களுக்கு நில, இன, மொழி, உணவு, உடை அடையாளம் உண்டு. ஞான அடையாளம் வேண்டுமென்றால் அது திருக்குறள் மட்டும்தான். திருக்குறள்தான் தமிழர்களின் ஞான அடையாளம். திருக்குறள் இன்றுவரை வாழ்வதற்கு காரணம் அதன் உயிர்ப்புத்தன்மை.
ஆயிரம், ஐநூறு நோட்டுகள் அல்ல திருக்குறள், அது தங்கக்காசு. எவராலும் ஒருபோதும் செல்லாததாக்க முடியாது. எங்கள் திருக்குறள் தங்கம், அது எப்போதும் மதிப்பு வாய்ந்தது. திருக்குறள் இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் என முக்காலத்துக்கும் பொருத்தமானது. வள்ளுவரின் படைப்பு உத்தியை உலகில் வேறு யாரும் கையாண்டது இல்லை.
மூன்றரை மாதம் இரவு, பகலாக மேற்கொண்ட உழைப்பால் உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. வள்ளுவர் மட்டுமல்ல, தொடர்ந்து 18 தமிழ் முன்னோடிகளைப் பற்றியும் கட்டுரை எழுத உள்ளேன்.
திருக்குறளை வாசிப்பதன் மூலமாக அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். திருக்குறளின் பெருமையை தமிழர்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com