நடைப்பயிற்சி போன தி.நகர் எம்எல்ஏ சுற்றி வளைப்பு: வாக்காளர்கள் கொந்தளிப்பு

தி.நகர் எம்எல்ஏ பி. சத்தியநாராயணன், வழக்கம் போல நேற்று காலை ஜீவா பூங்காவுக்குள் நடைப்பயிற்சி செல்ல நுழைந்த போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை
நடைப்பயிற்சி போன தி.நகர் எம்எல்ஏ சுற்றி வளைப்பு: வாக்காளர்கள் கொந்தளிப்பு


சென்னை: தி.நகர் எம்எல்ஏ பி. சத்தியநாராயணன், வழக்கம் போல நேற்று காலை ஜீவா பூங்காவுக்குள் நடைப்பயிற்சி செல்ல நுழைந்த போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்தனர்.

சுமார் 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சத்தியநாராயணனை சுற்றி வளைத்து, விகே சசிகலா அணிக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது முடிவுக்குக் காரணம் என்ன என்று கேள்விகளைக் கேட்டும் திணறடித்தனர்.

பொதுமக்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த எம்எல்ஏ, கூவத்தூர் விடுதியில் தான் அடைத்து வைக்கப்படவில்லை என்றும், அங்கு மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும் கூறிய காட்சி செல்போன் விடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் கூட்டம் சேர்ந்ததாலும், மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் சத்தியநாராயணன் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இது பற்றி சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களில் ஒருவர் கூறுகையில், எம்எல்ஏக்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இது சுமார் அரை மணி நேரம் நீடித்தது என்றார்.

மற்றொரு பெண்மணி, எங்களது வாக்குகளை கேட்டு ஒவ்வொரு வீடாக வந்தார்களே, இப்போது முக்கிய முடிவெடுக்கும் முன்பு ஏன் எங்களை கலந்தாலோசனை செய்யவில்லை. மக்களின் கருத்தை ஏன் கேட்கவில்லை. எங்கள் யாருக்கும் சசிகலா தலைமையிலான அரசு தேவையில்லை. எங்கள் தொகுதி எம்எல்ஏவின் இந்த முடிவால் நாங்கள் மிகுந்த அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளோம் என்று கூறினார்.

இது குறித்து எம்எல்ஏ சத்தியநாராயணன் கூறுகையில், தமிழக அரசு விவகாரமும், சசிகலாவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதும் தனித்தனி விவகாரங்கள். மக்கள் அதனை பிரித்துப் பார்க்க வேண்டும். எதற்காக சசிகலாவை ஆதரித்தீர்கள் என்று மக்கள் என்னை கேட்கிறார்கள். இது அம்மாவின் ஆட்சி. இந்த ஆட்சி கலைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்கிறார் முதல் முறையாக எம்எல்ஏவானவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com