நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு: திமுக தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை

சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனு அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை

சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனு அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முதலில் விசாரிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-இல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு சட்ட விரோதமானது. அதிமுக எம்எல்ஏக்களை விருப்பமின்றி, கூவத்தூரில் உள்ள விடுதியில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையை முழு சுதந்திரத்துடன் பயன்படுத்த முடியவில்லை. அவர்களை முதல்வரின் ஆதரவாளர்கள் பேருந்தில் பேரவைக்கு அழைத்து வந்து, ஆதரவாக வாக்களிக்க நிர்பந்திக்கப்பட்டனர். அவர்கள் மனசாட்சிப்படி வாக்களிக்காமல், கட்டாயத்தின்பேரிலேயே வாக்களித்திருக்கின்றனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் நிர்பந்தப்படுத்தப்பட்டதாலேயே, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளின் விடுத்த கோரிக்கையை பேரவைத் தலைவர் நிராகரித்துவிட்டார். திட்டமிட்டே எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியிருக்கிறார். இது ஜனநாயக மரபுக்கும், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளுக்கும் முரணானது. இதுகுறித்து ஆளுநரிடமும் முறையிட்டிருக்கிறோம்.
தற்போதுள்ள அரசால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும், பேரவையில் அன்றைய தினம் நடைபெற்ற விடியோ பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவை அறிவிக்கும் வரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கொள்கை ரீதியான எந்தவித முடிவுகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திமுக வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம் முறையீட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவித்து அவசர வழக்காகவும் விசாரிக்குமாறு கோரினார்.
இதையடுத்து, மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர். மாலையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதால், இந்த மனு அவசர வழக்காக செவ்வாய்க்கிழமை முதலில் விசாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com