பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
பேரவைத் தலைவர் தனபால் அவர் சார்ந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் திமுகவினர் நடந்துகொண்டதாகக் கூறியுள்ளார். இது உள்நோக்கத்துடன், அவர் மீதுள்ள பழியைப் போக்குவதற்காக சொல்வதாகும். இதற்கு நாங்களும் அடிமையாகிவிட மாட்டோம். மக்களும் ஏற்கமாட்டார்கள்.
வேதனைப்படுகிறேன்: திமுகவினரைப் பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டு தனபால் செய்வதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. அதனால், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை பேரவையில் கொண்டு வர உள்ளோம். இதற்கு 34 எம்எல்ஏக்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாலே போதுமானதாகும். அப்படிக் கொடுத்த 15 நாள்களில் பேரவையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டப் பேரவை விதிகளில் இருக்கிறது. நிச்சயம் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை திமுக கொண்டு வரும்.
குடியரசுத் தலைவரையும் சந்தித்து...: சட்டப் பேரவையில் நடைபெற்ற நிகழ்கவுகள் குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தோம். குடியரசுத் தலைவரையும் நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளோம். இந்த நடவடிக்கைகளில் வரும் முடிவுகளுக்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்ல முடியாது. பேரவைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
நாளை உண்ணாவிரதம்: பேரவையில் நடைபெற்ற விவகாரங்கள் தொடர்பாக தமிழகம் முழுவதும் பிப். 22-இல் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும். இந்த ஆட்சியை அகற்றுவதற்கு திமுக எடுக்கும் முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு சார்பில்தான் விடியோ எடுக்கப்படுகிறது. அதனால், அவர்கள் கொடுக்கும் காட்சிகள் மட்டும்தான் வெளியிடப்படுகிறது. எனவேதான் பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்.
இருக்கையில் அமர்ந்தது தவறு: சட்டப்பேரவையில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. எதிர்த்தரப்பில் இருந்தும் சண்டையிட்டால்தான் வன்முறை என்று சொல்ல முடியும். அவர்கள் வாக்களிக்கும் ஒரே குறிக்கோளுடன் காசைப் பெற்றுக் கொண்டு நன்றிக் கடன் காட்டுவதற்காக அமைதியாக இருந்தனர்.
பேரவைத் தலைவரின் இருக்கையில் திமுகவினர் அமர்ந்தது தவறுதான். ஆனால், பேரவை நடக்கும்போது யாரும் அமரவில்லை. பேரவை ஒத்திவைக்கப்பட்டபோதே அப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இனி, அதுபோன்ற தவறுகள் நடக்காது.
மணல் குவாரிகளை அரசே நடத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. அதிமுக ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனைகள் நடத்தினர். ஆனால், இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு அமைதியாக இருக்கிறது. இதை மறைக்கவே அதிமுகவில் நடக்கும் விவகாரங்களுக்கு திமுக மீது பழிபோடப்படுகிறது.
வைகோவுக்கு பதில் இல்லை:
வைகோ ஓர் அரசியல் ஞானி. பேரவையில் ரகசிய வாக்கெடுப்பே நடந்தது இல்லை என்று அவர் கூறியதற்கெல்லாம் பதில் அளிக்க விரும்பவில்லை. மூத்த தலைவரான கி.வீரமணியை மதிக்கிறோம். திமுக தலைவர் கருணாநிதி இல்லாததால்தான் பேரவையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துவிட்டன என்று திமுகவினரை வீரமணி குறை கூறுவதைப் பற்றி கருத்து எதுவும் சொல்லவில்லை என்றார்.

"கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம்'


பேட்டியின்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து, ஸ்டாலின் கூறியதாவது:
முதுமை காரணமாக கருணாநிதிக்கு உடலில் சில பிரச்னைகள் உள்ளன. டிரக்யாக்ஸ்டமி அறுவைச் சிகிச்சை செய்து, கழுத்தில் குழாய் அவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. அதனால், பேசுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com