முதல்வராகப் பொறுப்பேற்றார் பழனிசாமி: அனைத்து அமைச்சர்களும் பணிகளைத் தொடங்கினர்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைத் தொடர்ந்து, மற்ற துறைகளின் அமைச்சர்களும் தங்களது பணிகளை திங்கள்கிழமை (பிப்.20) தொடங்கினர்.
முதல்வராகப் பொறுப்பேற்றார் பழனிசாமி: அனைத்து அமைச்சர்களும் பணிகளைத் தொடங்கினர்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைத் தொடர்ந்து, மற்ற துறைகளின் அமைச்சர்களும் தங்களது பணிகளை திங்கள்கிழமை (பிப்.20) தொடங்கினர்.
இதையடுத்து, கடந்த 15 நாள்களாக தமிழகத்தில் ஏற்பட்டு வந்த அரசியல் ரீதியான குழப்பங்கள் முடிவுக்கு வந்து, தலைமைச் செயலகத்தில் இயல்பு நிலை திரும்பியது.
சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கடந்த சனிக்கிழமையன்று (பிப்.18) பெரும்பான்மையை நிரூபித்தது. இதன் பின், முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்களும் தங்களது பொறுப்புகளை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டனர்.
5 கோப்புகளில் கையெழுத்து: முதல்வராகப் பொறுப்பேற்க தலைமைச் செயலகம் வந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா உள்ளிட்டோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதன் பின், முதல்வரின் அறைக்குச் சென்ற அவர் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அதிமுக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான மு.தம்பிதுரை உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பல்வேறு திட்டங்களில் 5 முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் எடப்பாடி கே.பழனிசாமி கையெழுத்திட்டார்.
பணிகளைத் தொடங்கினர்: முதல்வர் பழனிசாமியைத் தொடர்ந்து, அமைச்சர்களும் தங்களது அறைகளுக்குச் சென்று பணிகளைத் தொடங்கினர். அமைச்சர்கள் அனைவரது அறைகளுக்கும் சென்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். முதல்வரின் முன்னிலையில் அமைச்சர்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டு தங்களது பணிகளைத் தொடங்கினர்.
விறுவிறுப்பானது தலைமைச் செயலகம்: தமிழகத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களால் தலைமைச் செயலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது. முதல்வராக யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையில், சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபித்து பொறுப்புகளை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டார். அமைச்சர்களும் தங்களது பொறுப்புகளை ஏற்றதால், தலைமைச் செயலகம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட முதல்வர் அறை
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மூடப்பட்டிருந்த முதல்வரின் அறை திங்கள்கிழமை (பிப். 20) திறக்கப்பட்டது. அதில் எடப்பாடி கே.பழனிசாமி அமர்ந்து தனது பொறுப்புகளை ஏற்றார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா இருந்த போது, கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று மீனம்பாக்கத்தில் இருந்து சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்துடன் தலைமைச் செயலகத்தில் மேலும் பல திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இதற்காக அன்றைய தினம் (செப். 21) தலைமைச் செயலகம் வந்தார்.
இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 22 ஆம் தேதியன்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு அவர் மறைந்தார்.
இந்த நிலையில், முதல்வராக கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியன்று நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது. அதன் பின்பு, முதல்வராக தலைமைச் செயலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்த போதும் அவர் முதல்வருக்குரிய அறையைப் பயன்படுத்தவில்லை. தனது அறையிலேயே அமர்ந்து பணிகளை மேற்கொண்டார்.
திறக்கப்பட்ட அறை: ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற சூழலில், அவர் தனது பொறுப்புகளை திங்கள்கிழமை (பிப். 20) ஏற்றுக் கொண்டார்.
அப்போது, முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறையிலேயே அவர் அமர்ந்தார். அங்கு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளைத் தொடங்கினார். கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு இப்போது முதல்வரின் அறை திறக்கப்பட்டு பணிகள் அங்கு நடைபெறத் தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com