வள்ளுவருக்காக வைரமுத்து எழுதிய சாசனம்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

வள்ளுவர் முதற்றே அறிவு' கட்டுரை திருவள்ளுவருக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய சாசனம் என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.

வள்ளுவர் முதற்றே அறிவு' கட்டுரை திருவள்ளுவருக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய சாசனம் என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
தமிழ் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் திருவள்ளுவர் குறித்து கவிஞர் வைரமுத்து தினமணியில் எழுதும் கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:
"வள்ளுவர் முதற்றே அறிவு' நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பின்னணி உள்ளது. மகாகவி பாரதியின் பிறந்த நாளன்று அவரைப் பற்றியக் கட்டுரையை சென்னையில் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றம் செய்தார். கவிச்சக்ரவர்த்தி கம்பரைப் பற்றிய பதிவும் சென்னையில்தான் அரங்கேற்றப்பட்டது. அடுத்ததாக வள்ளுவப் பேராசானைப் பற்றிய கட்டுரையை மதுரையில் தான் அரங்கேற்ற வேண்டும் என்று எங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் தோன்றியது என்பதுதான் வியப்பு.
திருக்குறள் பற்றிப் பேசும்போது என்னால் எனது எழுத்துலக ஆசான், ஆசிரியர் சாவியை நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. ஆசிரியர் சாவி இளைஞராக 60 ஆண்டுகளுக்கு முன்னால் "ஆனந்த விகடன்' இதழின் உதவியாசிரியராக இருந்தபோது நடந்த சம்பவம் இது.
அப்போதெல்லாம் அந்த இதழின் படைப்புகளுக்கு சன்மானம் வழங்கும்போது, அதன் நீளத்தை அளந்து அங்குலத்துக்கு ஓரணா என்று படைப்பாளிகளுக்குத் தருவது வழக்கமாக இருந்ததாம். அந்த சன்மானத்தை உயர்த்துவது குறித்த விவாதம் ஆசிரியர் குழுவில் எழுந்தது.
ஆனந்த விகடனின் பதிப்பாளரும், ஆசிரியருமான "ஜெமினி' ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ். வாசன் தலைமையில் சன்மானத்தை இரட்டிப்பாக்குவது குறித்து விவாதிக்கும்போது, உதவி ஆசிரியர் சாவி வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாராம். "என்ன சிரிக்கிறாய்?' என்று எஸ்.எஸ். வாசனிடமிருந்து கேள்வி எழுந்தது. "திருவள்ளுவர் நமது ஆனந்த விகடனுக்கு ஒரு திருக்குறளை அனுப்பித் தந்தால் அதற்கு நாம் எவ்வளவு சன்மானம் தருவோம் என்று சிந்தித்தேன். சிரிப்பு வந்தது' என்றாராம் சாவி. அது
முதல், படைப்புத் தரத்துக்கு சன்மானம் வழங்குவது என்கிற முறைக்கு உத்தரவிட்டாராம் எஸ்.எஸ். வாசன்.
வள்ளுவப் பேராசானுக்கும் மதுரைக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. திருக்குறள் எத்தனையோ தடைகளை மீறி மதுரையில்தான் அரங்கேற்றப்பட்டது. பாண்டிய மன்னன் சபையில் மதுரை தமிழ்ச் சங்கத்தில் குறளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ் அறிஞர்கள் கூறியபோது தமிழ்ச் சங்கத்தின் தலைவரான இறைவனே அதை அங்கீகரித்து எடுத்துக் கொடுத்தான் என்பது கர்ண பரம்பரை வழக்கு. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குறள் அரங்கேறிய அதே மாமதுரையில் இப்போது குறள் குறித்த கவிஞனின் பதிவு அவரது குரலில் அரங்கேற்றப்படுகிறது என்பதுதான் சிறப்பு.
இலக்கியப் படைப்புகள் அரங்கேற்றப்படுவது உலகில் வேறெங்கும் இல்லை. அறிஞர்கள் சபையில் படைப்புகள் அரங்கேற்றப்
படுவதும், அதன் சிறப்புகள் விவாதிக்கப்படுவதும் சீரிய பண்பு. நமக்கு மட்டும் தான் இப்படி ஒரு பண்பாடு உண்டு. அந்த பண்பாட்டுக் கூற்றின் நீட்சியாகவே இந்தக் கட்டுரை இங்கே அரங்கேற்றப்படுகிறது.
இது கட்டுரை அல்ல, வள்ளுவருக்காக எழுதப்பட்ட சாசனம். தமிழ் கூறும் நல்லுலகிற்கு வைரமுத்து அளித்துள்ள சாசனம் இது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com