விரைவில் மனை வணிக ஒழுங்குமுறை ஆணையம்

மனை வணிக ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், இதன் இணையதள சேவை ஓரிரு மாதங்களில் மேற்கொள்வதற்கான வடிவமைப்புப் பணிகளை சிஎம்டிஏ
விரைவில் மனை வணிக ஒழுங்குமுறை ஆணையம்

மனை வணிக ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், இதன் இணையதள சேவை ஓரிரு மாதங்களில் மேற்கொள்வதற்கான வடிவமைப்புப் பணிகளை சிஎம்டிஏ தீவிரப்படுத்தியுள்ளது.
கட்டுமான வணிக விற்பனையில் ஏற்படும் மோசடிகளை தடுப்பதற்கு மனை வணிக சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.
யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதைத்தொடர்ந்து, மாநிலங்களில் கொண்டு வர கால அவகாசம் தரப்பட்டது. ஆனால், சில மாநிலங்கள் காலம் தாழ்த்தி வந்த நிலையில், விரைந்து செயல்படுத்துமாறு மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் அண்மையில் வலியுறுத்தியது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் சட்டப் பேரவையில் சட்டம் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மனை வணிக ஒழுங்குமுறை ஆணையத்தை கொண்டுவரும் நடவடிக்கையிலும் தமிழகம் ஈடுபட்டு வருகிறது.
பலன் என்ன? இந்த ஆணையத்தில் கட்டுமான நிறுவனங்கள், அதன் திட்டங்கள் கட்டாயம் பதிவு செய்த பின்னரே, குடியிருப்புகளை விற்பனை செய்யமுடியும். அதுபோல், அனைத்து திட்ட செயல்முறைகளை வெளிப்படையாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்தல் வேண்டும். அதன்படி, மனைத் திட்டம் (லே அவுட் பிளான்), நிலத்தின் தகுதி, குடியிருப்புப் பதிவுகள், சட்ட ரீதியான அனுமதி விவரம் உள்ளிட்டவையும் வாடிக்கையாளர்களுக்கு தெரிந்துகொள்ளலாம்.
உரிய காலத்தில்..: வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படும் குறிப்பிட்ட தொகையை வேறு திட்டத்துக்கு பயன்படுத்த முடியாது. அதுபோல், குடியிருப்பை திரும்ப தர காலம் தாழ்த்தவும் முடியாது. ஏதேனும் மோசடி செய்தால், திட்டத்தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் அபராதம் செலுத்தவும், கட்டுமான திட்ட அனுமதியை ரத்து செய்யப்படும் விதமாக வாடிக்கையாளருக்கு ஆதரவாக ஆணையம் செயல்படும்.
இதுகுறித்து வீட்டு வசதித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:-
கட்டுமான நிறுவனங்களில் இருந்து குடியிருப்பை விற்பவர், வாங்குவோர் இடையேயான ஒப்பந்தம் வெளிப்படையாகத் தெளிவாக இருக்கும் வகையில், ஒழுங்குமுறை ஆணையத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமல்படுத்த வரைவு அறிக்கை தயார் நிலையில் உள்ளது. இந்த சட்டத்துக்கு முழுமையாக உதவிடும் வகையில், மனை வணிக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
தேர்வுக் குழு: மனை வணிக ஆணையத்துக்கு நியமன தேர்வுக் குழு அமைக்கப்பட உள்ளது. அதன்மூலம், தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, இணையதள சேவை வடிவமைப்புப் பணிகளை சென்னை பெருநகர வளரச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தொடக்கியுள்ளது. அதன்படி, ஓரிரு மாதங்களுக்குள் இந்த இணையதள சேவை தொடங்கப்பட உள்ளது என்றனர்.

போலி விளம்பரங்களால் ஏமாற்ற முடியாது!
வீட்டு மனைகள், புதிய குடியிருப்புகள் விற்பனை குறித்து பல்வேறு விளம்பரங்கள் வெளிவருகின்றன. இவற்றில் கவர்ச்சியான, போலியான, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வாடிக்கையாளர்களை சிலர் ஏமாற்றி விடுகின்றனர். மனை வணிக சட்டம், ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் இதுபோன்று செயல்களில் இனி யாரும் ஈடுபட முடியாது. அதுபோல், மக்களை ஏமாற்றவும் முடியாது. அவ்வாறு ஈடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு இதன் விதிமுறைகள் உள்ளன. அத்துடன், வீடுகள் விற்பனை செய்யும் இடைத் தரகர்கள், முகவர்கள் உள்ளிட்டோரும் மனைவணிக ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையாக பதிவு செய்தல் அவசியமாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com