23 ஆண்டுகளுக்குப் பிறகு கஞ்சா வழக்கில் திமுக பிரமுகர் கைது

கஞ்சா வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட கம்பம் திமுக பிரமுகர், தனது பெயரை மாற்றிக்கொண்டு "நான் அவனில்லை' என்ற பாணியில் கடந்த 23 ஆண்டுகளாக போலீஸாரை ஏமாற்றி வந்த நிலையில்,

கஞ்சா வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட கம்பம் திமுக பிரமுகர், தனது பெயரை மாற்றிக்கொண்டு "நான் அவனில்லை' என்ற பாணியில் கடந்த 23 ஆண்டுகளாக போலீஸாரை ஏமாற்றி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம், கம்பம் உத்தமபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி என்ற செல்லப்பாண்டி (45). இவர், கடந்த 1993 ஆம் ஆண்டு கேரளத்திலிருந்து போடி வழியாக கஞ்சா கடத்த முயன்றபோது, குரங்கனி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து கஞ்சா மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட செல்லப்பாண்டி, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதையடுத்து, இவர் தனது பெயரை சிங் செல்லப்பாண்டி என மாற்றிக்கொண்டும், வழக்கிலும் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, போடி நீதிமன்றம் இவரைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை பிறப்பித்தது. மேலும், இவர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றவாளி எனவும் நிரூபிக்கப்பட்டது.
இந்நிலையில், பிடியாணையின்பேரில் இவரை பிடிக்கச் சென்ற போலீஸாரிடம், நான் அவனில்லை என்ற பாணியில் தனது பெயர் சிங் செல்லப்பாண்டி எனக் கூறியுள்ளார். மேலும் இவர், நகர திமுக செயலர் பதவியிலும், திமுக முன்னாள் வார்டு உறுப்பினராகவும் இருந்து வந்ததாலும், போலீஸார் இவரைக் கைது செய்யாமல் இருந்து வந்தனர்.
இதனிடையே, தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன் உத்தரவின்பேரில், போடி நகர் காவல் ஆய்வாளர் சேகர் தலைமையிலான தனிப்படை போலீஸார், செவ்வாய்க்கிழமை அதிகாலை செல்லப்பாண்டி என்ற சிங் செல்லப்பாண்டியின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com