தமிழ் எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட 24 பேருக்கு "சாகித்ய அகாதெமி' விருது

2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.
2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதை தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கும் அகாதெமியின் தலைவர் விஷ்வநாத் பிரசாத் திவாரி.
2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதை தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கும் அகாதெமியின் தலைவர் விஷ்வநாத் பிரசாத் திவாரி.

2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.

சாகித்ய அகாதெமி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி, குஜராத்தி, மைதிலி உள்பட 24 இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு அல்லது விமர்சனம் ஆகிய படைப்புகளில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு 2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன.
இதில், தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனின் "ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும் விருதுக்குத் தேர்வானது. இதையொட்டி, தில்லியில் சாகித்ய அகாதெமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கமானி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. அகாதெமி தலைவர் விஷ்வநாத் பிரசாத் திவாரி தலைமை வகித்து எழுத்தாளர்கள் வண்ணதாசன் (தமிழ்), பிரபா வர்மா (மலையாளம்), பபினேனி சிவசங்கர் (தெலுங்கு), நஸீரா சர்மா (ஹிந்தி) உள்பட 24 மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதெமி விருதுகளை வழங்கினார். படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மராத்தி எழுத்தாளரும், இயற்பியல் துறை வல்லுநருமான ஜயந்த் விஷ்ணு நர்லிகர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். சாகித்ய அகாதெமியின் துணைத் தலைவர் சந்திரசேகர் காம்பர், செயலர் கே.ஸ்ரீனிவாசராவ், பொதுக் குழு உறுப்பினர்கள் கி.நாச்சிமுத்து, இரா.காமராசு, இரா.சம்பத், பாமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சாகித்ய அகாதெமி அரங்கில் தாய்மொழிகள் பாதுகாப்பு தொடர்பான தேசியக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில், எழுத்தாளர்கள் இந்திரநாத் சௌத்ரி, ராகுல் தேவ், சா.கந்தசாமி, சந்திரபிரகாஷ் தேவல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வண்ணதாசன் யார்?: திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனின் இயற்பெயர் சி. கல்யாண சுந்தரம் (71). கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும், வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும் எழுதி வருபவர்.
மணிப்பூரி, மராத்தி, டோக்ரி, மைதிலி, ஒடியா, ராஜஸ்தானி, தமிழ் எழுத்தாளர்கள் 2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதில் வண்ணதாசனும் ஒருவர். இவர் எழுதிய 15 சிறுகதைகள் அடங்கிய "ஒரு சிறு இசை' எனும் தொகுப்பு நூல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
இவரது தந்தையும், திறனாய்வாளருமான மறைந்த தி.க.சிவசங்கரன் 2000-இல் சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றிருந்தார். இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவரது மகனான வண்ணதாசன் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
சிறந்த மொழியாக்க விருது: இதற்கிடையே, 2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழியாக்கத்துக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு 22 பேரை அதாதெமியின் நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை தேர்வு செய்துள்ளது. "சீரியன் மென்' என்ற மனு ஜோசஃப் எழுதிய ஆங்கில நாவலை தமிழில் "பொறுப்புமிக்க மனிதர்கள்' என்ற பெயரில் மொழியாக்கம் செய்ததற்காக எழுத்தாளர் பூர்ணசந்திரன் தேர்வாகியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com