புதுவையில் பேனர்கள், விளம்பர பலகைகளை வைக்க புதிய திட்டம் அமுல்

புதுச்சேரியில் பேனர்கள், விளம்பர பலகைகள், வைப்பது தொடர்பாக புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பேனர்கள், விளம்பர பலகைகள், வைப்பது தொடர்பாக புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் 2017-ம் ஆண்டுக்கான அதிகாரபூர்வ தொலைபேசி நாள்காட்டி (டயரி) வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி புதிய டயரியை வெளியிட அமைச்சர் நமச்சிவாயம், பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவையில் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடங்களில் பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன என பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார்கள் வந்தன. இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதில் முடிவு செய்யப்பட்டபடி புதுச்சேரியில் பேனர்கள், விளம்பரபலகைகள் வைத்துள்ள தனியாரும், விளம்பரதாரர்களும் 10 நாட்களுக்குள் அவற்றை அகற்றி விட வேண்டும்.

புதிதாக ஒப்பந்தம் கோர நடவடிக்கை
அரசு உருவாக்கியுள்ள புதிய விதிமுறைகளின்படி அரசு ஒதுக்கும் இடங்களில் தான் பேனர்கள், விளம்பர பலகைகளை வைக்க வேண்டும். இதற்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட உள்ளன. 

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் ஒப்பந்தப் புள்ளி எடுத்தவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி அரசு அனுமதி தந்துள்ள இடங்களில் பேனர்கள், விளம்பர பலகைகளை வைத்துக் கொள்ளலாம். தனியார் இடங்களில் வைக்கப்படும் பேனர்கள், விளம்பர பலகைகளும் இந்த திட்டத்தின் கீழ் வரும்.

இதற்கான அரசாணை வெளியிடப்படவுள்ளது. மீறுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். 

உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவை மாநிலம் 18 சதுர கிமீ மட்டுமே உள்ளதாலும், மாநிலத்தின் வருவாய் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்திற்காக மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். எனினும் உச்சநீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கின்றதோ அதன்படி செயல்படுவோம்.

புதுச்சேரியில் ரூ.283 கோடி செலவிலான புதை சாக்கடை திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிவைடைந்துள்ளன. 10 சதம் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு விடும். 70 சதவீதம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. கழிவுநீரை மறுசுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்படும்.

புதுச்சேரி நகரம் முழுவதும் குப்பைகள் சீராக வாரப்பட்டு வருகின்றன. தற்போது 9 வார்டுகளில் வீடுகள் தோறும் மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதை அனைத்து வார்டுகளிலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளின் வருவாயை பெருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வரி இனங்களை வசூலிக்க முனைப்பாக செயல்பட்டு வருகிறோம் என்றார் நமச்சிவாயம்.

பேனர்களில் படங்களை போட வேண்டாம்: நாராயணசாமி
காங்கிரஸ் கட்சியினர் வைக்கும் பேனர்களில் எனது படத்தையோ, தலைவர்கள் படங்களையோ போட வேண்டாம். பொதுமக்களுக்கு இடையூறு இன்றி காங்கிரஸ் கட்சியினரும் பேனர்கள், விளம்பர பலகைகளை வைக்க வேண்டும் என உடனிருந்த முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com