முதுமலை வனப் பகுதியில் 3 யானைகள் சாவு

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 3 யானைகள் உயிரிழந்துள்ளன.
முதுமலை புலிகள் காப்பகத்துக்குள், சாண்டி சாலை பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை.
முதுமலை புலிகள் காப்பகத்துக்குள், சாண்டி சாலை பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 3 யானைகள் உயிரிழந்துள்ளன.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதியில் சுமார் 6 மாதம் நிரம்பிய ஆண் யானைக் குட்டியின் உடல் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.
அதேபோல, சாண்டி சாலை பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானையின் உடலும் கண்டறியப்பட்டது. பிதர்க்காடு பகுதியில் அழுகிய நிலையில் மற்றொரு யானையின் உடலும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 3 யானைகளுக்கும் கால்நடை உதவி இயக்குநரும், வனத்துறை கால்நடை மருத்துவருமான மனோகரன், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் விஜயராகவன் ஆகியோர் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த 3 யானைகளில், பிதர்க்காடு பகுதியில் இறந்து கிடந்த யானையின் உடலிலிருந்த தந்தங்கள் அகற்றப்பட்டு, உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இந்தத் தந்தங்கள், கர்நாடக மாநிலம், குண்டல்பேட்டையில் காவல் துறையினரின் சோதனையில் திங்கள்கிழமை சிக்கியவையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மசினகுடி பகுதியில் குட்டி யானையின் உடலும் அழுகிய நிலையில் காணப்பட்டது. சாண்டி சாலை பகுதியில் இறந்து கிடந்த யானையின் உடலுக்கு அருகில் புலியின் கால் தடங்கள் பதிவாகியிருந்ததால், அது வன விலங்குகளுக்கு உணவாகும் வகையில் அப்படியே விடப்பட்டதாக மருத்துவர் மனோகரன் தெரிவித்தார்.
வயதானதால் ஏற்படும் தளர்ச்சியுடன், பற்கள் தேய்வு, வறட்சியால் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறை, உடல்நலக் குறைவு ஆகியவையே யானைகளின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
உணவுப் பற்றாக்குறை: இந்த 3 யானைகள் உயிரிழப்பு தொடர்பாக ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் கே.காளிதாஸ் கூறியதாவது:
முதுமலை புலிகள் காப்பகத்தைப் பொருத்தவரை, மாயாறு, கேம்ஹட், ஓம்பட்டா ஆகிய 3 இடங்களில் தற்போது தண்ணீர் உள்ளது.
மாறாக தினசரி சராசரியாக 250 கிலோ வரை தழையுணவு தேவைப்படும் யானைகளுக்கு இப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக போதிய உணவு கிடைப்பதில்லை. இதனால், பலவீனமடையும் யானைகள் சிறிய அளவிலான நோய்த் தொற்றாலும்கூட இறந்து விடுகின்றன.
வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் தெங்குமரஹாடா, கோவை வனப்பகுதிகளில் தான் யானை நடமாட்டம் இருக்கும். ஆனால், குட்டிகளின் பாதுகாப்புக்காகவும், உணவுக்காகவும் முதுமலை பகுதியிலேயே தற்போது பெருமளவிலான யானைகள் முகாமிட்டுள்ளன.
முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் களைச் செடிகளையும், உண்ணிச் செடிகளையும் அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த ஆண்டேனும் மேய்ச்சல் பரப்பு அதிகரிக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com