மே 14-க்குள் உள்ளாட்சித் தேர்தல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 14-க்குள் உள்ளாட்சித் தேர்தல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அதுதொடர்பான அரசாணையை எதிர்த்து திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்ததோடு, புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடைபெற்ற இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:-
சமூக ஆளுகை தொடர்பான பிரச்னை. இந்த வழக்கை மேற்கொண்டு இழுத்தடிக்க முடியாது. ஆகையால், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை முடித்து, மே 14-க்குள் தேர்தலை நடத்த வேண்டும்.
2016-ஆம் ஆண்டு அக்டோபர் 4-இல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும். தேர்தல் நடத்த தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக அரசு வழங்க வேண்டும்.
மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை மார்ச் 6-ஆம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என்றனர்.
'குற்றப் பின்னணி உள்ளவர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது'
உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வந்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து முழு விவரத்தை தனி மனுவாக சமர்ப்பிக்கக் கூறும், தமிழக அரசின் பஞ்சாயத்து (தேர்தல்) சட்டம் 1995, விதி 26-இல் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
1-9-2006-இல் வெளியிடப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணையின் அடிப்படையில், குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிடாதவர்களின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.
வேட்பாளர்களின் குற்றப் பின்னணி பற்றிய விவரங்களை வாக்காளர்கள் அறியும் வகையில், தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் கடிதம் வாயிலாகத் தெரிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com