ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புகார் வந்தால் பரிசீலனை: மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே தகவல்

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு உத்தேசித்துள்ள "ஹைட்ரோ கார்பன்' எனும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு உத்தேசித்துள்ள "ஹைட்ரோ கார்பன்' எனும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தால் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்தார்.
காற்று மாசு தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அனில் மாதவ் தவே பேட்டியளித்தார். அப்போது அவரிடம் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்த உத்தேசிக்கப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அச்சம் தெரிவித்து பொதுமக்கள், அரசியல கட்சிகள் வெளியிடும் கருத்துகள் தொடர்பாக கேட்கப்பட்டது.
இதற்கு அனில் மாதவ் தவே பதில் அளிக்கையில், "இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டம் தொடர்பாக விவசாயிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் தமிழகத்தில் மேற்கொண்டுள்ள போராட்டங்கள் தொடர்பாக எனது கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தால், உரிய முறையில் கவனத்தில் கொண்டு பரிசீலிப்போம். தற்போதைய நிலையில் திட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்புதலை திரும்பப் பெறும் யோசனையை அரசு பரிசீலிக்கவில்லை' என்றார்.
ஆய்வுக்கு ஒப்புதல்: தமிழகத்தில் கடந்த ஆண்டு மீத்தேன் திட்டத்துக்கு எதிராக உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவால், அத்திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது.
தற்போது மீத்தேன் திட்டத்தின் பெயரை மாற்றி ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் மீண்டும் தஞ்சாவூரில் அத்திட்டத்தை செயல்படுத்த க்ரீன் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் (ஜிஇஇசிஎல்) மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் வரும் திங்கள்கிழமை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சுற்றுச்சூழல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com