போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ் விற்பனை: இருவர் கைது

போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை மாம்பலம் வட்டாட்சியராகப் பணிபுரிபவர் ஆனந்த் மகாராஜன். இவரிடம் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க ஒரு இறப்புச் சான்றிதழ் அசோக்நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து சில நாள்களுக்கு முன்பு வந்தது. அந்த இறப்புச் சான்றிதழ் குறித்து ஆனந்த் மகாராஜன் ஆய்வு செய்ததில், அது போலியானது என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அவர் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அந்த போலி சான்றிதழை தயாரித்து கொடுத்தது சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி (42), ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் (52) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அவர்கள் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
சுப்பிரமணி ஈக்காட்டுதாங்கலில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். அங்கேயே அவரும் ஆனந்தும் சேர்ந்து போலி சான்றிதழ்களை தயாரித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர்.நகர் அருகே உள்ள பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஒருவர், தனது தந்தையின் இறப்புச் சான்றிதழை பெறுவதற்கு ஆனந்தை அணுகியுள்ளார். அவரிடம், ஆனந்த் ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இறப்புச் சான்றிதழை பெற்றது போன்று, தாங்கள் தயாரித்த போலி இறப்புச் சான்றிதழை அவரிடம் கொடுத்திருக்கிறார்.
அந்தச் சான்றிதழை, அசோக் நகர் சார் -பதிவாளர் அலுவலகத்தில் பாகப்பிரிவினைக்காக சமர்ப்பிக்கப்பட்டது. இதில், அந்த இறப்புச் சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அலுவலக ஊழியர்கள், மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அதை அனுப்பி வைத்தனர். அதன் பின்னரே போலி சான்றிதழ் தயாரித்து கொடுக்கும் கும்பல் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியது.
கைது செய்யப்பட்ட இருவரும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்து ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்றுள்ளனர். இந்தக் கும்பலிடமிருந்து போலீஸார், சுமார் 100 போலி முத்திரைகள், 33 போலி சான்றிதழ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com