எங்களது முக்கிய எதிரி திமுக: அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி

திமுகதான் எங்களுக்கு முக்கிய எதிரி என்று அதிமுக துணை பொதுச் செயலாளராக இன்று பதவியேற்றுக் கொண்ட டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எங்களது முக்கிய எதிரி திமுக: அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: திமுகதான் எங்களுக்கு முக்கிய எதிரி என்று அதிமுக துணை பொதுச் செயலாளராக இன்று பதவியேற்றுக் கொண்ட டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் அண்மையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டி.டி.வி. தினகரன் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்று அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக முறைப்படி பொறுப்பேற்றுகொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்வின் பொழுது அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உடன் இருந்தனர். 

பதவியேற்றுக் கொண்ட பின்னர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது: 

புதியஆட்சிக்கு சிக்கல் உண்டாக்க தற்பொழுது திமுகவினர் மக்கள் என்ற போர்வையில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த பொழுது தமிழக சட்டசபையில் கலவரம் செய்து ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்தவார்தான் ஸ்டாலின். திமுகதான் எங்களுக்கு முக்கிய எதிரி. ஆனால் பேரவை விதிகளுக்கு உட்பட்டுதான் சபாநாயகர் தனபால் பேரவையை நடத்தினார்

அதிமுகவைப் பொறுத்தவரை எந்த ஒரு தனி நபரோ, குடும்பத்தினரோ ஆதிக்கம் செலுத்தமாட்டார்கள். நான் ஒன்றும் திடீரென அதிமுகவுக்கு வந்தவன் அல்ல. ஜெயலலிதா அப்போதே எனக்குப் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளை வழங்கினார். பின்னர் ஜெயலலிதா கூறியதால் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தேன்.

ஆட்சிக்கு எதிராக பரவலாக மக்களின் கோபம் என்பது எல்லாம் பொய் பரப்புரை. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கட்சிப் பொருளாளர் சீனிவாசன் கட்சியின் வங்கிக் கணக்குகளை  கவனித்து வருகிறார். கட்சி யாரை முடிவு செய்கிறதோ அவரே ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

ஜெயலலிதாவின் ஆட்சி தொடரவே நாங்கள் பாடுபடுவோம். ஓபிஎஸ் போன்றவர்களின்  செயல்பாடு அதிமுக என்ற எஃகு கோட்டையை எப்பொழுதும் பாதிக்காது. வழிதவறிச் சென்றவர்கள் எல்லாரும் மீண்டும் அதிமுகவுக்கு வருவார்கள்.அப்படி வருபவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். 

இவ்வாறு டிடிவி தினகரன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com