நியாய விலைக் கடைகளில் தட்டுப்பாடின்றி பொருள்கள் வழங்கப்படும்: அமைச்சர் ஆர். காமராஜ்

தமிழகத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.
நியாய விலைக் கடைகளில் தட்டுப்பாடின்றி பொருள்கள் வழங்கப்படும்: அமைச்சர் ஆர். காமராஜ்

தமிழகத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.
தமிழகத்தின் புதிய அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர். காமராஜ், புதன்கிழமை திருவாரூர் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான கொல்லுமாங்குடியில் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சி ஏழை, எளிய சாதாரண மக்களுக்கான ஆட்சியாக இருந்தது போல், புதிய அரசின் ஆட்சியும் இருக்கும். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முறையை, தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்கும்.
மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இணைந்துள்ளது. தமிழக மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசித் திட்டம் தொடரும். விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்படும். குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படாத வகையில், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ. 179 கோடி வறட்சி நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் காமராஜ்.
முன்னதாக, சிறுபுலியூரில் கிருபா சமுத்திரபெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் ஆர். காமராஜூக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல், நீடாமங்கலத்திலும் அமைச்சர் ஆர். காமராஜூக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com