போயஸ் தோட்டம் யாருக்கு; ரூ.100கோடியை யார் செலுத்துவார்கள்? தீபக் விளக்கம்

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ரூ.100 கோடி அபராதத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் தானே செலுத்துவேன் என்று தீபக் கூறியுள்ளார்.
போயஸ் தோட்டம் யாருக்கு; ரூ.100கோடியை யார் செலுத்துவார்கள்? தீபக் விளக்கம்


சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ரூ.100 கோடி அபராதத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் தானே செலுத்துவேன் என்று தீபக் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகன் தீபக், செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்தார்.

அப்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த ரூ.100 கோடி அபராதத்தை யார் செலுத்துவார்கள் என்று கேட்டதற்கு, நீதிமன்ற அபராதத்தை, கடன் வாங்கி நாங்கள்தான் கட்டுவோம் என்றார். அதற்கு நீங்களும், உங்கள் சகோதரி தீபாவும் சேர்ந்து கட்டுவீர்களா என்றதற்கு, இல்லை, நான் தான் கட்டுவேன் என்று கூறினார்.

மேலும், போயஸ் தோட்டம் யாருக்கு சொந்தம் என்று கேட்டதற்கு, போயஸ் தோட்டம் எனக்கும் தீபாவுக்கும் மட்டுமே உரிமையுடையது என்று தெளிவாகக் கூறினார்.

பல்வேறு கேள்விகளுக்கு மிகச் சரியாக பதில் அளித்த தீபக், அதிமுகவில் இருந்து விலகிச் சென்ற பன்னீர்செல்வம் கட்சிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று கூறினார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதில் எனக்கு வருத்தம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சசிகலா அணியில் இருந்து வந்த நிலையில், அதிமுக துணைப் பொதுச் செயலராக டிடிவி தினகரனின் தலைமையை ஏற்க முடியாது என்றும், பன்னீர்செல்வமே கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

சசிகலா ஜெயலலிதாவுடன் இருந்தவர். அவர் என் அம்மா போன்றவர். அவரது தலைமையை ஏற்போம். ஆனால், அவருடைய குடும்பத்தினர் கட்சியின் தலைமையை ஏற்பதை என்னால் மட்டும் அல்ல, கட்சியின் அடிப்படைத் தொண்டர்களால் கூட ஏற்றுக் கொள்ள முடியாது, சசிகலாவின் குடும்பத்தினர் யாரும் கட்சிப் பொறுப்புகளை ஏற்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

நான் இப்போது சசிகலாவுக்குத்தான் ஆதரவு. வாழ்நாள் முழுவதும் இங்கேயே தான் இருப்பேன். எங்கேயும் போக மாட்டேன் என்றும் தீபக் கூறியுள்ளார்.

அதே சமயம், பன்னீர்செல்வம் அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும். அவரோ அல்லது எடப்பாடி பழனிசாமியோ கூடகட்சியின் தலைமையை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com