வேலை இல்லாதவர்களுக்கான உதவித் தொகை: இரு மடங்காக உயர்த்தி வழங்க உத்தரவு

வேலை இல்லாதவர்களுக்கு அரசு மூலம் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை 10 ஆண்டுகளுக்கு பின் இருமடங்காக உயர்த்தி வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலை இல்லாதவர்களுக்கு அரசு மூலம் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை 10 ஆண்டுகளுக்கு பின் இருமடங்காக உயர்த்தி வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 85 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து, பணிக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். எனவே இவர்கள் பயனடையும் வகையில் வேலை இல்லாதவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2006-முதல் செயல்படுத்தி வருகிறது.
வேலை தேட...: இத்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதில் மாற்றுத்திறனாளியாக இருந்தால் ஓராண்டு நிறைவு செய்தாலே போதுமானது. படிப்பை முடித்துவிட்டு, வருமானமின்றி வாடும் இளைஞர்கள், வேலை தேடி விண்ணப்பிக்கும் போது ஏற்படும் அஞ்சலகச் செலவு, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வழிகாட்டு புத்தகங்கள் வாங்குவதல் உள்பட செலவுகளை ஈடுகட்டவே இத்திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
குறையும் எண்ணிக்கை: இத்திட்டம் தொடங்கிய போது 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உதவித் தொகை பெற்று வந்தனர். அதைத் தொடர்ந்து செலவும் அதிகரித்து விட்டதாலும், உயர்த்தி வழங்காத காரணத்தால் உதவித் தொகை பெறும் இளைஞர்களிடையே ஆர்வம் குறைந்தது. இதில் 2013-14-இல் 1.03 லட்சம் பேராகவும், 2014-15-இல் 95 ஆயிரம் பேராகவும், 2015-16-ஆம் ஆண்டில் 70 ஆயிரம் பேராகவும் குறைந்துவிட்டது.
இரு மடங்கு உயர்வு: கடந்த ஜனவரி வரையில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடையாதோருக்கு ரூ.100, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150, பிளஸ் 2 தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.200, பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.300 என கல்வித் தகுதிக்கேற்ப வழங்கப்பட்டது. தற்போது அதிகாரிகள் பரிந்துரையைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் இருமடங்காக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கிண்டியைச் சேர்ந்த பட்டதாரி ராஜேஸ்வரன் கூறியதாவது: தற்போது போட்டித் தேர்வுக்கான புத்தகங்களின் விலை, ஆன்-லைன் விண்ணப்பக் கட்டணம், மாநில, மத்திய அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுக்கான கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளன. இந்த நிலையில் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்குவதன் மூலம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்றார் அவர்.
இது குறித்து வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உதவித் தொகையை இரு மடங்காக அரசு உயர்த்தியுள்ளது. இத்தொகையை வழங்க பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு மட்டும் ரூ.4.68 கோடி ஒதுக்கியுள்ளது. இது அவரவர் வங்கிக் கணக்குகளில் விரைவில் விடுவிக்கப்படும். அதேபோல், 2017-18-க்கு ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com