500 மதுக்கடைகள் இன்று முதல் மூடல்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.24) முதல் 500 டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளும், அவற்றுடன் இணைந்த 169 மதுக்கூடங்களும் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.24) முதல் 500 டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளும், அவற்றுடன் இணைந்த 169 மதுக்கூடங்களும் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலையை அடைய டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூனில் ஏற்கெனவே 500 டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மூடப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, முதல்வரின் உத்தரவுப்படி, தமிழகமெங்கும் 500 மதுபானக் கடைகளும், அவற்றுடன் இணைந்த 169 மதுக்கூடங்களும் வெள்ளிக்கிழமை முதல் (பிப். 24) மூடப்படுகின்றன.
மாற்றுப் பணி நிச்சயம்: 500 மதுபானக் கடைகள் மூடப்படுவதால், உபரியாக உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் பணியிழப்பு ஏற்படாமல், டாஸ்மாக் நிறுவனத்திலேயே வேறு மாற்றுப் பணி வழங்கப்படும்.
எங்கெங்கு எவ்வளவு கடைகள்? சென்னை மண்டலத்தில் (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்) 105 கடைகளும், 63 மதுக்கூடங்களும், கோவை மண்டலத்தில் (கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு) 44 கடைகளும், 20 மதுக்கூடங்களும் மூடப்படும். இதேபோல், மதுரை மண்டலத்தில் (மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி) 99 கடைகளும், 37 மதுக்கூடங்களும் மூடப்படவுள்ளன.
சேலம் மண்டலத்தில் (சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம்) 133 கடைகளும், 26 மதுக்கூடங்களும் மூடப்படும். திருச்சி மண்டலத்தில் (திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், கடலூர், திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர்) 119 கடைகளும், 23 மதுக்கூடங்களும் மூடப்படுகின்றன.
அனைத்து மண்டலங்களிலும் சேர்த்து 500 மதுபானக் கடைகளும், 169 மதுக்கூடங்களும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com