69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார் பழனிசாமி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார் பழனிசாமி


சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினையும், வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமையாக்குதல் திட்டத்தினையும் துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி மு. பழனிசாமி இன்று ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மகிழம்பூ மரக்கன்றினை நட்டு, திட்டங்களை துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்கிலும், வனப்பகுதியில் மட்டுமின்றி வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் “மாபெரும் மரம் நடும்” திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதாவின்  பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும், கடந்த 2012-ஆம் ஆண்டு 64 லட்சம் மரக்கன்றுகளும், 2013-ஆம் ஆண்டு 65 லட்சம் மரக்கன்றுகளும், 2014-ஆம் ஆண்டு 66 லட்சம் மரக்கன்றுகளும், 2015-ஆம் ஆண்டு 67 லட்சம் மரக்கன்றுகளும், 2016-ஆம் ஆண்டு 68 லட்சம் மரக்கன்றுகளும் நடப்பட்டு இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளையொட்டி மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ் 65 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

இந்த மரக்கன்றுகளை நடும் பணியானது பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும் இம்மரக்கன்றுகள் வனப்பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு பருவநிலை மற்றும் மண்வளத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளான ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்படும்.

மேலும் சென்னை மற்றும் அதை அடுத்துள்ள மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் இருந்த பெரும்பாலான மரங்கள் வர்தா புயலால் வேரோடு சாய்க்கப்பட்டும், பாதிப்பிற்கும் உள்ளாகின. அரசு நிலங்களில் மரங்களை நடுவதற்கும், தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மரம் நடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக 50,000 மரக்கன்றுகள் நடுவதற்கும், இந்த மாவட்டங்களிலுள்ள காப்புக்காடுகளில் 2,20,000 மரக்கன்றுகள் நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு மானிய விலையில் 2,62,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட உள்ளது.

மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காக 13 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது. மரங்கள் நடுவது மற்றும் பசுமைப் பரப்பை அதிகரிப்பது போன்றவை ஜெயலலிதாவின் உள்ளம் கவர்ந்த பணி என்பதால் இந்த மரம் நடும் பெருந்திட்டத்தினை அவரது 69-வது பிறந்த நாளான இன்று (24.2.2017) துவக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com